Tuesday, July 2, 2024

Latest Posts

அமெரிக்கத் தூதுவருடன் மனோ குழு சந்திப்பு – மலையக மக்களுக்கான உரிமைகள் குறித்து எடுத்துரைப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையிலான குழுவினருக்கும், மனோ கணேசன் எம்.பி. தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் மலையக சிவில் சமூக தூதுக்குழுவுக்கும் இடையில் காத்திரமான சந்திப்பு நேற்று (28) கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் மற்றும் த.மு.கூ./ஜ.ம.மு. களுத்துறை மாவட்ட அமைப்பாளர் அன்டன் ஜெயசீலன் மற்றும் சிவில் சமூகம் சார்பில் பெ.முத்துலிங்கம், பேராசிரியர் மற்றும் ம.ம.மு. பொது செயலாளர் விஜயசந்திரன், பேராசிரியர் சந்திரபோஸ், பேராசிரியர் ரமேஷ் ராமசாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அமெரிக்கத் தரப்பில், தூதுவருடன் அரசியல் அலுவலர் அடம் மிசெலோ, யூஎஸ்எய்ட் வேலை திட்ட முகாண்மை விசேட அலுவலர்கள்  ஜனக விஜயசிறி, ரெஹானா கட்டிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. ஊடகங்களுக்குத் தெரிவித்தாவது:-

“இலங்கையின் பன்னிரண்டு மாவட்டங்களில் பரந்து வாழும் மலையக மக்களை, இந்நாட்டில் முழுமையான குடி உரிமை கொண்ட மக்களாக  முறை மாற்றம் பெரும் நோக்கில், மலையக சிவில் சமூகத்தின் ஒத்துழைப்புடன் தமிழ் முற்போக்கு கூட்டணி, நாட்டில் அடுத்து வரும் அரசியல் மாற்றங்களை ஒட்டி வகுத்து வரும் வரை பாதை எழுத்து மூலமான ஆவணம் இன்று அமெரிக்கத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.

வாழ்வாதார காணி, வதிவிடக் காணி, கல்வி, தொழில் பயிற்சி, நில சார்பற்ற சமூக சபை ஆகிய முன்னுரிமை விடயங்கள் பற்றிய விபரங்கள் இந்த ஆவணத்தில் அடங்கியுள்ளன.  

தினக்கூலி தொழிலாளர்கள், பெருந்தோட்டத் துறையில் பங்காளர்களாக முறை மாற்றம் பெறல், பெருந்தோட்ட துறையில் வாழ்கின்ற அனைத்து நிலமற்ற குடும்பங்களுக்கு வதிவிடக் காணி வழங்கள், கல்வித் துறை தொடர்பில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில் நுட்பம் ஆகிய பாடங்களுங்கான விசேட ஆசிரியர் பயிற்சி கல்லூரி அமைத்தல், மலையகப் பெண்களுக்கான தாதியர் பயிற்சி கல்லூரி அமைத்தல் மற்றும் உலகளாவிய நாடுகளில் பரந்து வாழும் சிறுபான்மை இனத்தவர் மத்தியில் அமைய பெற்றுள்ள  நில சார்பற்ற சமூக சபைகள் பற்றிய அனுபவங்களைப் பகிர்த்து கொள்ளல் ஆகியவை பற்றி கலந்துரையாடப்பட்டன.

இத்தகைய நிறுவனங்களை அமைப்பது, அவை தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது, அரசமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது ஆகிய பொறுப்புகளை மக்கள் ஆணையுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்னெடுக்கும்.

அமெரிக்கா உட்பட எமது சர்வதேச சமூக நண்பர்கள் இவற்றுக்கான தொழில்நுட்ப உதவிகள், அபிவிருத்தி உதவிகள் ஆகியவற்றை எமக்கு வழங்க முன் வர வேண்டும் என்று நாம் கோரினோம். எமது கோரிக்கைகளைச் சாதகமாகப்  பரிசீலிக்க அமெரிக்கத் தூதுவர் தலைமையிலான குழுவினர் உறுதி அளித்தனர்.

மேலும், மலையக மக்கள் இலங்கையில் மிகவும் பின் தங்கிய பிரிவினாரக இருப்பதைத் தாம் ஏற்றுக்கொள்வதாகவும், அவர்களுக்கு விசேட ஒதுக்கீட்டு திட்டங்கள் தேவை என்பதைத் தாம் அறிந்துள்ளதாகவும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார். மேலும், தற்போது, அமெரிக்க அரசின் சார்பில் மலையக மக்களின் நலவுரிமைகள் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விளக்கிக் கூறி அது தொடர்பான எழுத்து மூலமான ஆவணம் ஒன்றையும் அவர் எமக்குக் கையளித்தார்.

எம்மிடையேயான இந்தக் கலந்துரையாடலை மென்மேலும் தொடரத் தான் விரும்புகின்றார் எனவும், மலையக மக்களுக்கு இன்னமும் உதவிடும் சந்தர்ப்பங்களை எதிர்நோக்க அமெரிக்க அரசு விரும்புகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், மலையக மக்கள் இந்நாட்டில் முழுமையான குடியுரிமை கொண்ட மக்களாக முறை மாற்றம் பெரும் நோக்கில் தமிழ் முற்போக்குக் கூட்டணியால் முன்வைக்கப்பட்ட ஆவணத்தை மேலும் செழுமைப்படுத்தி, அரசியல் பிரதிநிதிகளும், சிவில் சமூக உறுப்பினர்களும் இணைந்து சர்வ அம்சங்களும் அடங்கிய காத்திரமான அறிக்கையை அமெரிக்கத் தரப்பினரிடம் கையளிப்பது என்றும், பின்னர் அதன் அடிபடையில் விரிவான நடவடிக்கைகளை முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.