Thursday, November 28, 2024

Latest Posts

நாட்டுக்குச் சாபமாக மாறியுள்ள எதிரணிகளுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்!

எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இந்த எதிர்க்கட்சிகள் உண்மையில் நாட்டுக்கே சாபக்கேடு என்றும் குறிப்பிட்டார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கம்பஹா மாவட்ட முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நேற்று உடுகம்பலையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,

“ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அரச அதிகாரம் பெறுவதற்கு முன்பிருந்தே பொதுமக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வேலைநிறுத்தம் செய்து வரும் ஒரு கும்பல், ஆட்சி அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வார்கள் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

இப்படிப்பட்டவர்களிடம் இருந்து நல்ல எதிர்காலத்தை மக்கள் எதிர்பார்க்க முடியாது. தற்போது சம்பளத்தை அதிகரிக்க முடியாது. 2024 வரவு – செலவுத் திட்டத்தில் அதற்கான ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை.

ஆனால், அடுத்த வருடம் முதல் சம்பளத்தை அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி தொழிற்சங்கங்களுக்கு அறிவித்துள்ளார். அரசு என்ற ரீதியில் நாம் அவ்வாறு கூறினாலும் அவர்கள் அதே இறைச்சியை, இறாத்தலையே கேட்கின்றனர்.

கடனை மறுசீரமைக்க கடன் வழங்குபவர்களுடன் இலங்கை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இது ஒரு நாடாக எமக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். நாம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வோம் என்பதை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தியது. இந்த உடன்படிக்கையின் மூலம், நாம் இப்போது வெளிநாட்டுக் கடன்களை செலுத்தும் திறன் கொண்ட நாடாக இருப்பதை கடன் வழங்குனர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

நாடு வங்குரோத்து ஆனதாக அறிவித்த பிறகு, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அரசு மீண்டும் நிறைய நடவடிக்கைகளை எடுத்தது. வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க கடன் கொடுத்த தரப்பினரை ஒப்புக்கொள்ளச் செய்ததே நமது நாட்டின் மிகப்பெரிய சாதனையாகும். அதற்காக இரண்டு வருடங்கள் பேச்சு நடத்த வேண்டியிருந்தது.

கொரோனாத் தொற்றுநோய் நிலைமை மற்றும் போராட்டத்தால், நமது பொருளாதாரம் சரிந்தது. நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. எனவே, கடந்த காலத்தில் மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டோம்.

அந்தச் சிரமங்களை மக்கள் மிகுந்த நிதானத்துடன் பொறுத்துக்கொண்டனர். இதன் விளைவாக, அரசு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் அந்நியச் செலாவணி கையிருப்பைக் குவிக்க முடிந்தது. இப்போது மீண்டும் தேவைக்கு ஏற்ப சர்வதேச கடன்களைப் பெற முடிகின்றது. இதன்படி, இதுவரை நிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்கவும், புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் காரணமாக நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைத்த இந்த விரைவான வெற்றிகளை எதிர்க்கட்சிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் எப்போதும் இந்த நாட்டில் பாசாங்குத்தனம் மற்றும் பொறாமையின் அடிப்படையிலேயே அரசியல் செய்கிறார்கள். இந்தக் கடினமான நேரத்தில், அவர்கள் வேலைநிறுத்தம் செய்து நாட்டின் அனைத்து குடிமக்களையும் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாக்குகின்றார்கள். இந்த வேலைநிறுத்த மாபியாவால் நாட்டின் முன்னேற்றத்தை மாற்ற முடியாது.

சந்திகளில் கூட்டங்களை நடத்தி மக்களுக்குப் பொய்யான வீண்பேச்சுக்களை விட்டுச் செல்லும் எதிர்க்கட்சிக்கு பொருளாதார தீர்வே இல்லை. அந்தத் தோல்வியால்தான் நாங்கள் கோரிக்கை விடுத்தாலும் எதிர்க்கட்சிகள் நாட்டைக் பொறுப்பேற்க முன்வரவில்லை. இந்தப் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்த தருணத்திலிருந்து எதிர்க்கட்சிகள் வன்முறையை விதைத்து வேலைநிறுத்தங்களை ஆரம்பித்து வருகின்றன. இந்த விளையாட்டை இப்போது நிறுத்த வேண்டும். இந்த எதிர்க்கட்சிகள் உண்மையில் நாட்டுக்கே சாபக்கேடு. நாட்டுக்குச் சாபமாக மாறியுள்ள இந்த எதிர்க்கட்சிகள் குறித்து எதிர்வரும் தேர்தலில் மக்கள் இறுதித் தீர்மானம் எடுப்பார்கள்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.