இறையாண்மைப் படுகடன் நிலைபெறுதன்மையை மீட்டெடுப்பதற்கு உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானத்தை நாளைய தினம் (01) மாத்திரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (30) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
இதற்கமைய நாளை (01) மு.ப 9.30 மணி முதல் பி.ப 7.30 மணி வரை குறித்த தீர்மானம் மீதான விவாதம் நடத்தப்படவிருப்பதுடன், வாக்கெடுப்புக் கோரப்பட்டால் பி.ப 7.30 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும்.
இக்கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் கலந்துகொண்டிருந்தார்.
அதேநேரம், அடுத்த வாரம் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமைப் பாராளுமன்றத்தைக் கூட்டுவதில்லையென்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார். இதற்கு அமைய பாராளுமன்றம் அடுத்த வாரம் 5,6,7ஆம் திகதிகளில் கூடவுள்ளது.