மட்டக்களப்பில் பணிபுரியும் விமானப்படை வீரர் ஒருவர் இனந்தெரியாத குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த போது மீட்கப்பட்டுள்ளார்.
விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க இதனை உறுதிப்படுத்தியதுடன் குறித்த விமானப்படை வீரர் இன்று (28) காலை மீட்கப்பட்டதாக தெரிவித்தார்.
வீட்டிலிருந்து கடமை நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்த வேளையில் நேற்று (27) மாலை அரலகங்வில பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த குழுவினர் விமானப்படை வீரரின் ஆடைகளை அகற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அருகே “முரட்டு அரசியலுக்கு உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகிறார்கள்” என்று தமிழ் மொழியில் எழுதப்பட்ட போர்ட் ஒன்றும் காணப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், காயமடைந்த விமானப்படை வீரர் தற்போது வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.