மீண்டும் இனவாத மோதல்! எச்சரிக்கும் தேரர்

0
168

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான ஜனாதிபதியின் செயற்பாடுகள் மீண்டும் நாட்டில் இனவாத மோதல்களுக்கே கொண்டு செல்லும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையின் பின்னர், தனது கருத்தை முன்வைத்து உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ தற்போது ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கும் விடயங்களின் பாரதூர நிலைமையை சபையில் உள்ளவர்கள் புரிந்துகொண்டுள்ளார்களா என்று தெரியவில்லை.

நாட்டில் பொதுப் பிரச்சினைகள் உள்ளன. நிதி, கலாசார பிரச்சினைகள் உள்ளன. இவற்றை தீர்ப்பதற்கான இன விவகாரத்தை எடுக்க வேண்டாம். வடக்குக்கான அதிகாரம், தெற்கிற்கான அதிகாரம், கிழக்கிற்கான அதிகாரம், முஸ்லிம்களுக்கு அதிகாரம் அல்ல. மில்லியன் கணக்கில் முதலீடுகளை மாகாண சபைகளுக்கு கொண்டு வர முடியும் என்று கூறுகின்றார். 

இதன் ஆபத்துக்களை இந்த சபை சிந்திக்க வேண்டும் என்று கருதுகின்றேன். ஏதேனும் மாகாணத்திற்கென அவ்வாறு முதலீட்டை கொண்டு வர முடியாது. சீனாவை உதாரணமாக கூறியுள்ளீர்கள். அது தனி கட்சி நாடு. அங்குள்ள நிலைமை வேறு. அதனை இங்கே ஒப்பிட முடியாது.
 
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய சூழ்நிலை 50 வீதம் உள்ளது. மிகுதி 50 வீதத்தை நாடு முழுவதும் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கண்டாலே தீர்க்க முடியும். இதனால் இந்த பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும். அனைத்து இனத்தவர்களும் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம். 

வடக்கிற்கு அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பிரச்சினைகள் தீர்ந்துவிட போகின்றதா? 13 ஆவது திருத்தத்தை வழங்கியதும் யுத்தம் முடிந்துவிடும் என்று நினைத்தனர். ஆனால் யுத்தம் நடைபெற்றது. 

நாங்கள் மீண்டும் இனவாத போராட்டத்திற்கு செல்ல தயாராக இல்லை. இதனால் நாட்டு மக்களின் கோபத்தை உண்டாக்க வேண்டாம். நீங்கள் செய்யும் இந்த செயற்பாடு மீண்டும் இனவாத மோதல்களுக்கான பாதைகளையே ஏற்படுத்தும். இதை நாங்கள் விரும்பவில்லை. முதலில் தேர்தலை நடத்துங்கள்” என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here