கிழக்கு மாகாண மின்சார தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஊடாக நிறைவேற்றிக் கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் பிரதம செயலாளர், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை அரசாங்க அதிபர்கள், திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ஒழுங்கு வரைபடத்தைத் திட்டமிடுதல், அரசு அலுவலகங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு இலவச சோலார் பேனல்களை நிறுவுதல் ஆகியவை இந்தியக் கடன் வரியின் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில் அதனை செயற்படுத்துவது தொடர்பில் இங்கு கூடிய கவனம் செலுத்தப்பட்டது.






