Saturday, September 7, 2024

Latest Posts

காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்களை OMP அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கக் கோரி தொடர்ந்து போராடிவரும் உறவினர்களின் ஒரு உறவினரையேனும் கண்டுபிடிக்கத் தவறியுள்ள காணாமல் போனோர் அலுவலகம் (OMP) உண்மை வெளிவருவதைத் தடுக்கும் முயற்சியால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

தமது நீதிக்காகப் போராடும் தமிழ்த் தாய்மாரை அச்சுறுத்தி இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு முயற்சிக்கும் காணாமல் போனோர் அலுவலகம், மனித எலும்புகள் மீட்கப்பட்ட கொக்குத்தொடுவாய் புதைகுழியை மூடுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி நேற்றைய தினம் (ஓகஸ்ட் 18) முல்லைத்தீவில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகம் அதிகாரத்தை பயன்படுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அச்சுறுத்தி வருவதாக மரியசுரேஷ் ஈஸ்வரி மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

“வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தபோதும் எங்களுக்கு சர்வதேச விசாரணையே தேவையென நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றபோதிலும் அவர்கள் உள்நாட்டு பொறிமுறைக்குள் கொண்டுவந்து ஓஎம்பியை பலப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள். அந்த பலத்தை பயன்படுத்தி இன்றும் எமது மக்களை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை அச்சுறுத்தி விசாரைணைக்கு வரச்சொல்லி இரண்டு இலட்ச ரூபாய் பணம் தருவதாகக் கூறி அவர்களின் கையெழுத்துகளை பெற்று மரண சான்றிதழை தருவதற்கான ஆயத்தங்களை செய்துகொண்டிருக்கின்றார்கள்.”

கடந்த 15ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் காணாமல் போனோர் அலுவலகம் கையொப்பம் பெற்ற விடயத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் எனக் கூறி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளவும், அரசாங்கம் முன்வைத்துள்ள இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ளவும் தமது உறவுகளை இழந்த தமிழ்த் தாய்மார்கள் பகிரங்கமாக மறுத்து வருகின்றனர்.

போரினால் பாதிக்கப்பட்ட வன்னியின் பல பகுதிகளில் மனித உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் அப்பகுதி மக்கள் ஊடாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாக தவிசாளர் மரியசுரேஷ் ஈஸ்வரி வாரயிறுதியில் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

“மனித எச்சங்கள் பல பிரதேசங்களில் இருப்பதாக அந்த பிரதேச மக்கள் எங்களுக்கு அறிவித்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த வகையில் எமது ஆதரவு இன்றி மனித புதைகுழிகளை மூடி, ஓஎம்பி அலுவலகத்தால் பெருந்தொகையான நிதியை திரட்டி, அந்த அலுவலகத்தின் ஊடாக பெரும் நம்பிக்கையை சர்வதேசத்திற்கும் ஏற்படுத்தி, அதில் நாங்கள் தீவிரமாக பணியாற்றுகின்றோம் எனச் சொல்லி எங்களை நசுக்க ஓம்பி அலுவலகம் செயற்படுகிறது.”

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து 52 பேரின் எலும்புக்கூடுகள் ஒரு வருடத்திற்கும் மேலாக தோண்டி எடுக்கப்பட்ட பின்னர் அந்தப் பணிகள், 15 ஜூலை 2024 அன்று நிறைவு பெற்றது.

வெகுஜன புதைகுழியை மூடும் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் வெளியிட்ட மரியசுரேஷ் ஈஸ்வரி, தனது கண்டனத்திற்கான காரணங்களையும் விளக்கியிருந்தார்.

“அந்த இடத்தில் புதைகுழி மூடப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றோம். அந்த இடத்தை முழுமையாக அடையாளம் தெரியாமல் அழிப்பதை கண்டிக்கின்றோம். இன்னும் பல மனித எச்சங்கள் அதில் உள்ளதாக நாங்கள் அறிந்துள்ளோம். அயல் பிரதேசத்திலே இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. முழு ஆய்வு செய்து எமக்கான நீதி பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும். அதில் என்ன நடந்தது என்பதை அறிய காத்திருந்தோம் இன்று நாம் ஏமாற்றமடைந்துள்ளோம்.”

புதைகுழியின் அகழ்வுப் பணிகளை அவதானித்த சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன், ஓகஸ்ட் 8ஆம் திகதி நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், “இந்த மனித புதைகுழி இருந்த இடத்தை பொது மக்களிடம் கையளிப்பது தொடர்பில் அடுத்து தவணை விசாரணையில் தெரிவிப்பதாக காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மூடப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடையதா? என்பதை கண்டறிய ஆய்வுகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

2023 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில், நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய்களை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது, தற்செயலாக மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.