Tuesday, September 10, 2024

Latest Posts

கடந்த காலம் குறித்து தெரியாமல் எதிர்காலம் குறித்து பேச முடியாது

நாட்டுக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை தற்போதைய அரசாங்கம் நிரூபித்துள்ளதாகவும், அதன்படி புதிய இலங்கையை உருவாக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.வாக்குகளை திருடும் நிலைக்கு ஐக்கிய மக்கள் சக்தி தள்ளப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஜேவிபி கடந்த காலத்தை மறந்துவிட்டது என்றும், கடந்த காலத்தை மறந்துவிட்டு எதிர்காலத்திற்கு செல்ல முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

பத்தரமுல்ல மொனார்ஷ் இம்பீரியல் ஹோட்டலில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 73 ஆவது தேசிய மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களில் வீழ்ந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வழங்கிய ஆதரவை ஒருபோதும் மறக்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க:முதன்முறையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் மாநாட்டில் உரையாற்ற கிடைத்திருப்பது கௌரவமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க அதன் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். பின்னர் அதிலிருந்து பிரிந்து சென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிறுவினார். அப்போது எனக்கு 10 வயது. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவை பல தடவைகள் சந்தித்திருக்கிறேன். நாட்டை அபிவிருத்தி செய்ய இரு கட்சிகளும் அர்ப்பணித்துள்ளன. எங்களுக்குள் வேறுபாடுகளும் இருந்தன. அதனால் நன்மை தீமை என்ற இரண்டுமே கிட்டியது. கடந்த 75 வருடங்களில் என்ன செய்தோம் என்று இன்று சிலர் கேட்கின்றனர்.

நாங்கள் என்ன சொன்னோம், செய்தோம் என்ற பட்டியல் எங்களிடம் உள்ளது. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். அன்றைய அரசாங்கங்கள் இந்த நாட்டில் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்தின. நல்லதை போன்றே அவதூறுகளையும் ஏற்றுக்கொண்டோம். சில கட்சியினரை போன்று நாங்கள் வரலாறுகளை மறப்பதில்லை. எமது வரலாறு ஒரு இடத்திலும் வெறுமையானதாகவும் காணப்படவில்லை. நாங்கள் வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் எப்போதும் நாட்டைப் பற்றியே சிந்தித்தோம். 2022இல் நாட்டைப் பற்றியே சிந்தித்து செயற்பட்டோம். பாரம்பரிய அரசியல் தலைவர்கள் இருக்கவில்லை. ஒருபுறம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார்.

அதன் பிறகு என்ன நடந்தது? எதிர்க்கட்சித் தலைவரைப் போன்று அனுர திஸாநாயக்கவும் பிரதமர் பதவியை ஏற்கவில்லை. இருவரும் ஓடிவிட்டார்கள்.ஆனால் நாங்கள் ஒன்றுபட்டு ஆட்சி அமைத்தோம். 2022 ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவி விலகினார். அதன்பிறகு, நாட்டுக்கு தலைவர் இருக்கவில்லை. நாட்டில் அராஜக நிலை உக்கிரமடைந்து காணப்பட்டது. அன்று நாட்டுக்காக ஒன்றுபட்டதை நினைத்து பெருமைப்படுகிறேன். ஒன்றாக சேர்ந்து நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றினோம். நாட்டின் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டதால் தான் இன்று ஜனாதிபதி தேர்தலை நடத்தக்கூடிய நிலை உருவாகியுள்ளது. நாங்கள் நாட்டை கட்டியெழுப்புவோம், பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்று யாரும் நினைக்கவில்லை.

ஓரிரு மாதங்களில் போதுமான வளர்ச்சியை ஏற்படுத்த எங்களால் முடிந்தது. அதற்காக ஒன்றுபட்ட சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக்கிறேன். நீங்கள் அனைவரும் கட்சியையும் பாதுகாத்துக்கொண்டு, ஒற்றுமையாக எனக்கு ஆதரவளித்தீர்கள்.கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தினோம். தற்போது நாட்டை வலுவாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டிற்காக அர்பணிப்புடன் செயற்படத் தயாராக இருக்கிறோம். சிலர் நாட்டைப் பற்றி பேசினாலும் தங்களது சுயநலத்தை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். நாங்கள் நாட்டைப் பற்றி பேசுகிறோம், நாட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம்.

தற்போதைய எமது போராட்டமும் புதிய இலங்கையை உருவாக்குவதற்கானதாகும்.நாட்டுக்காக அரசியல் கட்சிகளாக ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை காண்பித்துள்ளோம். அந்த மாற்றம் மற்றும் முன்னேற்றத்திற்காக நாங்கள் பாடுபடுகிறோம். இளைஞர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கவே அந்த போராட்டத்தை நாங்கள் செய்கிறோம். இந்த நாடு எப்போதும் பிச்சை எடுக்கும் நாடாக இருக்க முடியாது. அந்நியச் செலாவணியை எப்போதும் பிற நாடுகளிடம் கோர முடியாது. நமக்குத் தேவையான பணத்தைக் தேடிக்கொள்ள வேண்டும்.

நாட்டில் வலுவான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும். அந்த பொருளாதாரத்தினூடாக இந்நாட்டு மக்கள் சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும்.விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ஏற்கனவே கிராமங்களை சென்றடைந்துள்ளது. அதன் பரீட்சார்த்த பணிகளை அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்கனவே ஆரம்பித்துள்ளார். மேலும், சுற்றுலாத்துறை மேம்பாட்டையும் கிராமங்கள் வரையில் கொண்டுச் செல்வோம். சுற்றுலா பயணிகளின் வருகையும் இரட்டிப்பாகும். இதனால் கிராமங்களுக்கும் பணம் வந்து சேரும். சூரிய சக்தி மின் உற்பத்தியையும் கிராமங்களுக்கு கொண்டுச் செல்வோம். இவற்றோடு புதிய முதலீட்டு வலயங்களையும் உருவாக்கி நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வோம்.

20 இலட்சம் பேருக்கு இலவச காணி உரிமை வழங்குவோம்.கொழும்பில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளின் வீட்டு உரிமை வழங்கப்படுகிறது. லயன் வீடுகள் அமைந்துள்ள பகுதிகள் கிராமங்களாக மாற்றப்படவுள்ளன. இந்த செயற்பாடுகள் இந்த நாட்டில் முதன்முறையாக செய்யப்படுகிறது. அதனை புரட்சிகள் என்றே கூற வேண்டும். அஸ்வெசும திட்டமும் புரட்சிகரமானது. பழைய டெலிபோனும் திசைகாட்டியும் நாட்டுக்கு என்ன செய்துள்ளன? ஐக்கிய மக்கள் சக்தி தமிழ் கட்சிகளின் வாக்குகளை திருடச் சென்று, அந்த தருணத்திலேயே மாட்டிக்கொண்டுள்ளது. அவர்களால் யாழ்ப்பாணம் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு இவ்வாறான செயற்பாடுகள் பொருத்தமானதல்ல. மேலும் ஜேவிபி கடந்த காலத்தை மறந்த கட்சியாகும். கடந்த காலத்தை அறியாமல் எதிர்காலத்திற்கு செல்ல முடியாது. அவர்கள் செய்ததை மறந்துவிட்டார்கள். அவர்களின் நாட்காட்டியில் 1971 ஆம் ஆண்டு இல்லை. முடிந்தால், அவர்களுக்கு 1971 என்று ஒரு வருடம் இருந்தது என்பதை காட்டுங்கள். அனைவரும் ஒன்றிணைந்து கிராமங்களை அபிவிருத்தி செய்வோம். சிலர் கட்சிகளைப் பற்றி பேசுகிறார்கள் ஆனால் இளைஞர்களைப் பற்றி பேசுவதில்லை. நாங்கள் ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல். நவீன விவசாயத்தை கிராமத்திற்கு கொண்டு வருதல்.மேலும் 50000 இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிக்காக நிவாரணம் வழங்குதல், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான தொழில் பயிற்சி வழங்குதல், வெளிநாடுகளிலும் சுகாதாரத் துறையில் ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன.

அந்த வாய்ப்புகளை கண்டறிந்து அவற்றை நோக்கி செல்ல இளைஞர்களை வழிநடத்துதல் உள்ளிட்டச் செயற்பாடுகளை முன்னெடுப்போம். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் இங்கு வந்துள்ளோம். நாட்டை அபிவிருத்தி செய்ய விரும்புகிறோம். இன்று எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்துகளுக்கு வரிசைகள் இல்லை. ஆனால் நான் உருவாக்கிய ஒரே வரிசை செப்டம்பர் 21ஆம் திகதி வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லப்போகும் வரிசை மட்டும்தான்.இந்தப் பயணத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நன்றி தெரிவிக்கிறேன். அப்போது நாங்கள் அரசியல் ரீதியாக எதிர் தரப்பினராக இருந்தாலும், எங்களுக்குள் ஒற்றுமை இருந்தது. சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் சகலரையும் நாம் அறிவோம். சுதந்திர கட்சி வழங்கிய ஆதரவை நான் என்றும் மறக்க மாட்டேன். முன்னோக்கிச் சென்று நல்ல பிரதிபலன்களை நாட்டுக்குக் காட்டுவோம். நாங்கள் ஒருபோதும் ஓடவில்லை. பிரச்சினைகளுக்கு துணிச்சலாக முகம்கொடுத்தோம். எதிர்காலத்திலும் பிரச்சினைகளுக்கு ஈடுகொடுத்து நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம். வெற்றி பெறுவோம்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.