Saturday, September 14, 2024

Latest Posts

தமிழ் மக்களின் பொதுச் சின்னம் ‘சங்கு’ – ரெலோ விடுத்துள்ள கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு நாளை முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்கள் தமிழ் மக்களின் பொதுச் சின்னமாகவுள்ள சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எமது மக்கள் சார்ந்து எமக்குள்ள தேசிய உணர்வையும் பொறுப்பினையும் வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரும் ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

கோப்பாய் பகுதியில் அரச சேவையாளர்களை நோக்கிய பிரச்சார நடவடிக்கைகளின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், அரச சேவையில் எமது மக்களுக்கான பணிகளை அர்ப்பணிப்புடன் எமது சகோதரர்கள் ஆற்றி வருகின்றீர்கள். அரச சேவையில் பல்வேறுபட்ட நெருக்கடிகள் இன ரீதியிலும் அரசியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டும் இன்றும் காணப்படுகின்றன.

அரச சேவையாளர்கள் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இன ரீதியில் பழிவாங்கப்பட்டுள்ளீர்கள்.

தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டமை நாட்டின் இன முரண்பாடுகளுக்கு பிரதான அடிப்படைகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது என்றால் அச் சட்டத்தின் காரணமான மிகவும் பாதிக்கப்பட்ட தரப்பினுள் அரச சேவையாளர்கள் உள்ளடங்கினீர்கள்.

பல்கலைக்கழக தரப்படுத்தல், அரச சேவையில் சிங்கள மயப்படுத்தல், அரச சேவையினை இராணுவ மயப்படுத்தல், அரசியல்கட்சி மயப்படுத்தல் என குறிப்பாக வடக்கக் கிழக்கில் பணியாற்றும் நீங்கள் இன ரீதியாக மாறி மாறி ஆட்சிக்குவந்த அரசாங்கங்களால் பாதிக்கப்பட்டீர்கள்.

தற்போது அவை நேரடியாகப் தெரியக்கூடியதாக பிரயோகிக்கப்படவில்லை ஆயினும் மறைமுகமாக இன ரீதியிலான புறந்தள்ளல்கள் இலங்கையின் நிர்வாக சேவைக் கட்டமைப்பு, இதர சேவைக்கட்டமைப்புக்களில் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இவ்விடயங்கள் எல்லாம் தமிழ் மக்களுக்கு எமது அரசியல் அபிலாசைகளைப் பிரயோகிக்கத்தக்க நிரந்தர அரசியல் தீர்வு கிட்டும் வரையில் தொடர்கதையாகக் காணப்படும் என்பதுவே உண்மை. இந் நிலையில் எமக்கும் பிரச்சினைகள் உண்டு என்பதை இரகசியமாக வாக்களித்து ஒடுக்குமுறையை வெளிப்படுத்துங்கள்.

தமிழ் பொதுவேட்பாளர் என்பது நாட்டினுள் இன நல்லிணக்கத்தினைத் துண்டாடுவதற்கானதல்ல.

மாறாக எங்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை வெளிக்காட்டுவதற்கானது.

இது ஜனநாயக ரீதியில் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட உரிமைசார் நடவடிக்கையுமாகும் என்பதை புரிந்து கொண்டு அரச உத்தியோகத்தர்கள்தமிழ் மக்களின் பொதுச் சின்னமான சங்குச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.