Thursday, September 19, 2024

Latest Posts

தமிழ்க் கட்சிகள் என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்கள்என் பக்கமே – ரணில்

“தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளபோதும் இந்த நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவு எனக்கு இருக்கின்றது.”

  • இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையின் சகல துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான அறிஞர்கள், தொழில் வல்லுநர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். ஜனாதிபதிக்கு நேரடியாகத் தமது கேள்விகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டமையும் விசேட அம்சமாகும்.

இங்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டதுடன், தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சாதகமான பதில்களை வழங்கினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

”தற்போது, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சீன எக்சிம் வங்கி மற்றும் 17 நாடுகளுடன் கடன் நிலைத்தன்மை, கடன் நிவாரணம் மற்றும் 2032 வரையிலான முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவுடன் உடன்பாட்டை எட்டியுள்ளோம்.

இந்தப் பாதையில் தொடர்ந்து செல்லப் போகிறோமா அல்லது மாற்றப் போகிறோமா என்பதுதான் இப்போதைய கேள்வி. அரசின் வருவாய் மற்றும் செலவினங்களின் தற்போதைய அளவுகோல்களை மாற்ற முடியாது. வரித் திருத்தங்கள் செய்யப்படலாம் என்றாலும், அதற்கு முழு அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

மாற்று வருமான வழிகளை முன்வைக்காமல் வரிகளைக் குறைத்து, அரச வருவாயைக் குறைத்து, நலன்புரி நடவடிக்கைகளின் மூலம் அரச செலவினங்களை அதிகரிக்க ஏனைய கட்சிகள் பரிந்துரைக்கின்றன. 2019 இல் வரி குறைப்பு மற்றும் அதிகப்படியான சலுகைகள் காரணமாக வருமானம் குறைந்தது. இதனாலேயே 2022 இல் பொருளாதார சிக்கல்கள் எழுந்தன. கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்ய வேண்டுமா என்று வினவ விரும்புகிறோம்.

எனவே, நாம் இப்போது ஒரு முடிவை எடுக்க வேண்டும். கொள்கை விவரங்களைப் பற்றி நான் பேசப் போவதில்லை. அடுத்த ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 3 பில்லியன் டொலர்களைப் பெற இருக்கிறோம்.

2040 – 2042 வரை கடன் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்துடன் கூடிய ஒப்பந்தமும் உள்ளது. அதை இழக்க நாம் தயாரா? நம் நாட்டிற்கு நடைமுறைச் சாத்தியமற்ற மாற்றம் தேவையில்லை. இந்த நெருக்கடியைச் சமாளித்து, 2042 இற்குள் ஸ்திரத்தன்மையை அடைய முடியும். ஆனால், நாம் விரைவில் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாறவில்லை என்றால், 2035 – 2040 இல் நாம் தொடர்ந்து கடன் வாங்கும்போது மற்றொரு நெருக்கடி ஏற்படலாம்.

எவ்வாறாயினும், போட்டித்தன்மை வாய்ந்த ஏற்றுமதி சார்ந்த, டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரமாக மாறுவதன் மூலம், தன்னிறைவான பொருளாதார மாற்றத்தை நோக்கி நாம் செல்ல முடியும். எங்களிடம் நிலம் போன்ற கணிசமான சொத்துக்கள் உள்ளன.

இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், உலக மக்கள் தொகை சுமார் 2 பில்லியன்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தச் சந்தைக்குத் தேவையான உணவளிக்க நமது விவசாயத்தை நவீனப்படுத்த வேண்டும். இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2.5 மில்லியனில் இருந்து 5 மில்லியனாக உயர்த்த வேண்டும்.

சுகாதாரம், கல்வி மற்றும் சமூக நலன்புரி ஆகிய துறைகளில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் இதை 10 வீதமாகக் குறைக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். தோட்டத்தில் தற்போதுள்ள பாரம்பரிய விவசாயத்திற்கு பதிலாக விவசாய வணிகங்களை உருவாக்கவும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். தற்போது லயன் அறைகளில் வசிப்பவர்களுக்கு நில உரிமை வழங்கவுள்ளோம்.

ஊழியர்களின் சேமலாபநிதி மற்றும் நம்பிக்கை நிதி ஆகியவற்றின் பணத்தை, பத்திரங்கள் மற்றும் கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, அதற்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்கின்றோம். தொழிற்சங்கங்களையும் முதலாளிகளிகளையும் இந்த செயல்பாட்டில் இணைக்க எதிர்பார்க்கிறோம்.

பெரும்பான்மையான மக்கள் தொகையில் குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட பெண்களின் நலனுக்காக பல விடயங்களை மேற்கொள்ள வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளோம்.

சாதி, இனம் போன்று நீடித்து காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆணைக்குழுவொன்று தொடர்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறோம். இனம், சாதி, மதம் வேறுபாடின்றி அனைவரையும் பாதித்த பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தல் நடைமுறை காண கிடைத்துள்ளதையிட்டு ஜனாதிபதி என்ற வகையில் நான் பெருமையடைகிறேன்.

இந்த சூழ்நிலை ஒரு நாடாக ஒன்றிணைவதற்கும், தற்போதுள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் வாய்ப்பளிக்கும். குழந்தை பராமரிப்பு மற்றும் குடும்ப வன்முறை போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டியுள்ளது. ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவு இருந்தாலும், அதற்குள் மேலும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

அதேபோல் நமது அரசியல் முறையிலும் மாற்றம் தேவைப்படுகின்றது. பொருளாதாரச் சரிவு அரசியல் முறையினையும் பாதித்துள்ளது. மற்றைய கட்சிகள் பழைய பொருளாதார கொள்கைகள் மீதே தங்கியுள்ளன. அது இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் முயற்சியாகும். அவ்வாறான செயற்பாடுகளை நம்பியிருக்க முடியாது.

அரசியல் கட்சிகள் எடுக்கும் தீர்மானங்களை நீதிமன்றம் வரையில் கொண்டு செல்லும் கலாசாரத்திற்கு மாறாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே சட்ட வரையறைக்குள் செயற்படும் வகையில் ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் செயற்படுத்தப்படும் நடைமுறையை உருவாக்க வேண்டும்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளையும் எடுப்பது அவசியம். சிலர் ஊழல், மோசடி தொடர்பான 400 கோப்புகள் பற்றி பேசுகின்றனர். அவற்றில் 15 பேர் மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்க கூடியவையாகும். எனவே, பேசிக்கொண்டிருப்பதை விடுத்து அதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

நாம் ஆட்சிக்கு வந்த பிறகு அதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை கோரினோம். ஊழல் தடுப்புச் சட்டம், குற்றச் செயல்கள் தொடர்பான சட்டம் போன்ற புதிய சட்டங்களை உள்ளடக்கிய ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை நாங்கள் செயற்படுத்தி வருகின்றோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டும். அதற்காக, இங்கிலாந்தைப் போல நாடாளுமன்றத் தரநிலை சட்டத்தில் திருத்தங்களை செய்ய எதிர்பார்க்கின்றோம். அதனால் பொருளாதாரத்தை போன்றே அரசியல், சமூக கட்டமைப்புக்களும் மாற்றத்துக்கு உள்ளாக வேண்டும்.

இந்த விரிவான மாற்றம் இளையோருக்கு ஔிமயமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கும். 1991இல் வியட்நாம் தொழில் அமைச்சருடன் வௌிநாட்டு முதலீடுகள் குறித்து உரையாடியது நினைவுக்கு வருகின்றது. நாம் விரைவில் மாற்றத்தை எட்டாத பட்சத்தில் மீண்டும் அவரிடம் பேசி ஆலோசனை கேட்க வேண்டிய நிலைமை உருவாகும். எனவே, செப்டெம்பர் 21ஆம் திகதி இந்த விடயங்களை நினைவில் கொள்ளுங்கள்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.