Sunday, October 6, 2024

Latest Posts

ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தமிழரின் வாக்குகள் – ரணிலை வெல்ல வைக்க வேண்டும் விஜயகலா கோரிக்கை

“இன்று தமிழ் மக்களின் வாக்குகள்தான் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கின்றன. எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் வங்குரோத்து நிலை வருவதைத் தடுக்க முடியாமல் போய்விடும்.”

  • இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், சங்கிலியன் பூங்காவில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ‘இயலும் ஶ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றதால் எல்லாவிதமான அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு வந்தது. இவ்வாறான கஷ்டங்களிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நாட்டு மக்களை மீட்டெடுத்தார். இன்று பலரும் அதனை மறந்துபோயுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர ஜனாதிபதி தனியொரு நபராக போராடினார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரப் பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வுகளைக் கொண்டிருக்கின்றார்.

எனவே, இந்தத் தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே தகுதியானவர். அனுபவமற்ற தலைவரைத் தெரிவு செய்தமையினாலேயே கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சி சரிவைக் கண்டது. அன்று பெருமளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னோடு இருந்தபோதும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க சஜித் பிரேமதாஸ முன்வரவில்லை.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் மக்களை மீட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இயலுமையைக் காண்பித்திருக்கின்றார். ஆனால், மற்றைய வேட்பாளர்களுக்கு அந்த இயலுமையும் இல்லை, நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டமும் இல்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வழிகாட்டியவர்களே இன்று சஜித் பிரேமதாஸவுக்கும் வழிகாட்டுகின்றனர். எனவே, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே தீர்வு வழங்க முடியும்.

எனவே, 2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்காமல் வடக்கு மக்கள் செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது. வடக்கு மக்களின் காணிப் பிரச்சினைக்கும் அவரே தீர்வுகளை வழங்க முன்வந்தார்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.