தென் மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற கொலைகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
156வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நேற்று (10) இடம்பெற்ற தென் மாகாண பிரதான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அஜித் ரோஹண இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் தென் மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவற்றில் 04 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள சம்பவங்களுடன் தொடர்புடையவர்களும் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் எனக் குறிப்பிடும் அஜித் ரோஹண, குற்றச் செயல்களில் ஈடுபட்டு சட்டத்தில் இருந்து தப்பலாம் என நினைத்தால் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
இன்னும் 06 வாரங்கள் கடக்கும் போது குற்றவாளிகளா அல்லது பொலிஸாரா வெற்றி பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என அஜித் ரோஹண கூறுகிறார்.