Sunday, October 6, 2024

Latest Posts

ரணிலின் வெற்றி காலத்தின் தேவை – யாழில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

நாட்டினதும் தத்தமதும் எதிர்காலம் கருதியும் மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்துத் தெளிவுடன் தமது வாக்குகளை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கவார்களாயின் அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்குள் சிறப்பான பொருளாதாரத்துடன் கூடிய வாழ்க்கை கட்டமைப்பு உருவாக்கிக்கொள்ள முடியும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிடைத்துள்ள இத்தகைய சந்தர்ப்பத்தை எமது மக்கள் தவறவிடமாட்டார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்,

“ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவம், அவருக்குள்ள சர்வதேச நாடுகளுடனான உறவு மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வல்லமை ஆகியவற்றைக் கொண்டு அவரே தொடர்ந்தும் இந்த நாட்டை வழிநடத்த வேண்டும் என்பதே நாட்டிலுள்ள அநேகரது விருப்பாக உள்ளது.

அதேபோன்று ஒவ்வொரு வீட்டிலும் இன்று எரிவாயு அத்தியாவசியமான பொருளாக இருக்கின்றது. அதேபோலத்தான் இன்றைய நாட்டின் சூழ்நிலைக்கும் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி அவசியமாக இருக்கின்றது.

எனவே, வரவுள்ள 21 ஆம் திகதி நடைபொறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு மக்களும் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அவரது சின்னமான எரிவாயு சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களிப்பது அவசியமாகும். இதை நான் வெறும் வாக்குகளைப் பெறுவதற்காகக் கூறவில்லை.

உங்கள் ஒவ்வொருவரதும் எதிர்காலத்தை மட்டுமல்லாது நாட்டையும் ஒளிமயமாக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வெற்றிகொள்ள வைக்கும் ஆளுமை ரணிலிடமே இருக்கின்றது.

கடந்தகால வரலாற்றை எடுத்துக்கொண்டால் ஆரம்பதிலிருந்து ஈ.பி.டி.பி. சரியான வழிகாட்டலைச் செய்து வந்துள்ளது.

எமது கொள்கையும் வழிமுறையும் சரியானதாக இருப்பதைக் கண்டு அதுதான் வெற்றியடையப் போகின்றது என்ற உண்மையை உணர்ந்த சக தமிழ்க் கட்சிகளும் குழுக்களும் அச்சம் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்மைப்பு என்ற ஒன்றைக் கட்டமைத்து அரசியல் செய்தார்கள்.

ஆனால், சக தமிழ் கட்சிகளிடம் நிலையான கொள்கை ரீதியாக எந்தவொரு வேலைத்திட்டமோ, அதற்கான பொறிமுறையோ இருக்கவில்லை. அது தொடர்பாக அக்கறையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை.

இதனிடையே கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சியில் வரலாறு காணாத வகையில் மக்கள் திரட்சியை ஈ.பி.டி.பி. செய்து காட்டியுள்ளது. இது பலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் எம் மீது சேறுபூசல்களையும் அவதூறுகளையும் செய்ய முயற்சிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஆனால், ஈ.பி.டி.பியினராகிய நாம் சரியான வேலைத்திட்டங்களையும் கொள்கைகளையும் வைத்திருந்தோம். இதனால்தான் எம்மை மளுங்கடிப்பதற்காகப் பல்வேறு சேறுபூசல்களை மேற்கொண்டு வந்தார்கள். எமது கொள்ககைளும் வழிநடத்தலும் சரியானதாக இருந்து வருகின்றமையால்தான் இம்முறை ரணிலுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் குறிப்பாகத் தமிழ் மக்களிடம் நான் அறைகூவல் விடுக்கின்றேன்.

அதுமட்டுமல்லாது ரணிலின் வெற்றியினூடாகத்தான் மக்களின் அபிவிருத்திக்கோ, அன்றாடப் பிரச்சினைக்கோ, அரசியல் உரிமை சார் பிரச்சினைககளுக்கோ தீர்வை எட்ட முடியும். இதுவே உண்மையும் கூட.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.