நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இடைக்கால நிர்வாகத்தின் தலைவராக அவர் இன்றிரவு பதவியேற்க உள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
26 சமூக வலைத்தளங்களுக்கு அந்த நாட்டில் தடை விதிக்கப்பட்டதை அடுத்து இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பின்னர் போராட்டம் தீவிரமான நிலையில், பாராளுமன்றம், அரச கட்டிடங்கள், அரசியல்வாதிகளின் வீடுகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்நிலையில் அந்த நாட்டு பிரதமராக செயற்பட்ட கே.பி சர்மா ஒலி தலைமையிலான அரசாங்கம் பதவி விலகியது.
அதன் பின்னர் நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை நேபாள இராணுவத்தினர் பொறுப்பேற்ற நிலையில், போராட்டங்கள் கைவிடப்பட்டு அந்நாடு இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்நிலையிலேயே நேபாளத்திற்கு இடைக்கால பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார்.