சர்வதேச அமைப்புகளின் அழுத்தங்களை தோற்கடிக்க அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே சகல அரசியல் கட்சிகளும் சகல அரசியல் விவாதங்களையும் புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை போன்ற நாடுகளில் பலவீனமான தலைவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே பலம்வாய்ந்த நாடுகளின் எதிர்பார்ப்பு என்றும், அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் போன்ற அனுபவமும் புரிந்துணர்வும் உள்ளவர் தலைவராக இருப்பது அந்த நாடுகளுக்கு பிரச்சினையாக இருந்ததாக வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டுகிறார்.
ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைவரானதை சிலர் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். பல நாடுகள் அச்சமடைந்துள்ளதாகவும் கருதமுடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.
இதன்காரணமாக நாடு மீண்டும் பலவீனமான தலைமைத்துவத்தின் பிடியில் சிக்காமல் தடுப்பது பொதுமக்களின் பொறுப்பு எனவும், ஜனாதிபதிக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே ஜனாதிபதி விக்ரமசிங்கவின் ஒரே நம்பிக்கை எனவும், அத்தகைய தொலைநோக்கு அரசியல்வாதி நாட்டின் தலைவராக பதவியேற்றமை நாட்டுக்கும் ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் கிடைத்த பாக்கியம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.