100 வீதம் முதியோர் பாராளுமன்றத்தினாலோ அல்லது 100 வீதம் இளைஞர் பாராளுமன்றத்தினாலோ நெருக்கடிகளை தீர்க்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் மற்றும் முதியோர்களுக்கு இடையிலான இந்த வித்தியாசத்தை நீக்கி இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் கலந்த ஆட்சியை உருவாக்க வேண்டியது நாட்டின் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச உத்தியோகத்தர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவது போன்று அரசியல்வாதிகளுக்கும் ஓய்வுபெறும் வயது அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என மக்கள் மத்தியில் பாரிய அபிப்பிராயம் நிலவி வருவதாகவும் அவ்வாறு நடந்தால் ஓய்வுபெறும் அரச உத்தியோகத்தர் அரசியலில் நுழைய வேண்டும் என்ற வாய்ப்பை இழக்க நேரிடும் எனவும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் கட்சிகளில் உள்ளக ஜனநாயகமின்மையே இளைஞர்களின் கையில் அதிகாரம் இல்லாததற்கு முக்கிய காரணியாக இருப்பதாகவும், இதுவரை நாட்டை ஆண்ட கட்சிகளில் தலைவர்கள் வரம்பற்ற அதிகாரத்தை பயன்படுத்தி வருவதாகவும் தேசப்பிரிய கூறுகிறார்.
அத்துடன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியை கூட பெறாத கட்சிகள் இவ்வாறான நிலையில் இளைஞர்களின் பிரச்சினைகள், பெண்களின் பிரச்சினைகள் மற்றும் சிறுபான்மை குழுக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயக தினத்தை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.