Saturday, November 23, 2024

Latest Posts

லண்டன் பங்குச் சந்தை விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இலங்கை அரசாங்கமும் சர்வதேச இறையாண்மை முறி உரிமையாளர்களும் 12.5 பில்லியன் டொலர் இறையாண்மை முறி கடனை மறுசீரமைப்பதற்காக கொள்கை ரீதியில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக லண்டன் பங்குச்சந்தை அறிவித்துள்ளது.

சீன அபிவிருத்தி வங்கியிடம் பெறப்பட்ட 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைப்பதற்கான கொள்கை ரீதியிலான இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறையாண்மை முறி என்பது சர்வதேச சந்தையில் அதிக வட்டிக்கு குறுகிய கால கடனை பெற்றுக்கொள்ளும் முறைமையாகும்.உரிய காலம் முதிர்ச்சியடைந்ததன் பின்னர் குறித்த கடன் தொகை மற்றும் அதற்கான வட்டியை செலுத்துவதற்கு நாடு கட்டுப்பட்டுள்ளது.

இறையாண்மை முறிகள் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை மீளச் செலுத்தும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தியதுடன் கடன் மறுசீரமைப்புக்கான பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்தது.பல்வேறு தரப்பினரின் தலையீட்டுடன் இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

பிளக் ரொக் உள்ளிட்ட முன்னணி நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இணைந்து சர்வதேச இறையாண்மை முறி கடன் வழங்குநர்களின் ஒன்றிணைந்த குழுவை உருவாக்கியதுடன் இந்த பேச்சுவார்த்தைகளில் குறித்த குழுவே முக்கிய பங்கை வகித்தது.இலங்கையின் உள்நாட்டு தரப்பினரும் இறையாண்மை முறிகளை கொள்வனவு செய்திருந்ததுடன், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி மற்றுமொரு தரப்பு இந்த பேச்சுவார்த்தையில் இணைந்தது.

Clifford Chance மற்றும் Lazard ஆகிய ஆலோசனை நிறுவனங்கள் இலங்கை சார்பில் இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டதுன் இறையாண்மை முறி உரிமையாளர்கள் சார்பில் White & Case மற்றும் Rothschild ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன.இந்த பேச்சுவார்த்தைகளுக்கு இணையாக சீன அபிவிருத்தி வங்கியுடனும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இறையாண்மை முறிகள் மறுசீரமைப்பு தொடர்பிலான தீர்மானமிக்க பேச்சுவார்த்தை நேற்று(18) நடைபெற்றதுடன் அந்த பேச்சுவார்த்தையின் பின்னரே கொள்கை ரீதியிலான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.இந்த கொள்கை இணக்கப்பாட்டுக்கு இலங்கையின் அமைச்சரவையும் இன்று காலை அனுமதி வழங்கியுள்ளதாக லண்டன் பங்குச்சந்தை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறையாண்மை முறிகள் மறுசீரமைப்பு எவ்வாறு நடக்கப்போகின்றது?இறையாண்மை முறி கடன் உரிமையாளர்களின் குழு மற்றும் இலங்கை மறுசீரமைப்பதற்கு இணக்கம் கண்டுள்ள முறிகளின் பெறுமதி 12.5 பில்லியன் அமெரிக்க டொலராகும்.மே மாதம் அறிவிக்கப்பட்டவாறு ப்ளேன் வெனிலா என்ற முறிகள் மீள விநியோகிக்கப்படவுள்ளதாகவும் லண்டன் பங்குச்சந்தை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது அரச நிர்வாகத்துடன் தொடர்புடைய சில விடயங்களை கருத்திற்கொண்டு கடனின் ஒருபகுதி தள்ளுபடி செய்யப்படவுள்ளது.மெக்ரோ லின்க்ட் எனப்படும் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு கடன் நிவாரணத்தை வழங்கும் திட்டமே ஏற்கனவே முன்மொழியப்பட்டிருந்து.எனினும் இன்று விடுக்கப்பட்ட அறிவித்தலில் அது தொடர்பில் உறுதியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதற்கு பதிலாக பொருளாதார காரணிகள், அரச நிர்வாகத்தின் நல்லொழுக்கம் ஆகிய விடயங்கள் கடன் மறுசீரமைப்பின் போது நிவாரணம் வழங்குவதற்காக கவனத்திற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.உள்நாட்டு கடன் உரிமையாளர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய அவர்கள் கொள்வனவு செய்துள்ள முறிகளில் 25 வீதத்திற்கான கடனை குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச இறையாண்மை முறி உரிமையாளர்களின் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்புக்கும் இந்த கடன் குறைப்பு பொருந்தும் என்றாலும் இதன்போது உள்நாட்டு கடன் உரிமையாளர்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படும் என லண்டன் பங்குச்சந்தை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன அபிவிருத்தி வங்கியுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடு என்ன?3.3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைப்பதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ள போதிலும் இந்த இணக்கப்பாடு தொடர்பிலான மேலதிக தகவல்கள் லண்டன் பங்குச்சந்தை அறிவித்தலில் உள்ளடக்கப்படவில்லை.

அடுத்ததாக என்ன நடக்கும்?

இறையாண்மை முறி தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு தொடர்பில் இருதரப்பு கடன் வழங்குநர்களை உள்ளடக்கிய உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தை தௌிவுபடுத்த வேண்டியுள்ளது.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் ஆரம்ப வரைபில் இந்த தீர்மானம் உள்ளடக்கப்பட்டுள்ளதா என ஆராயப்படவுள்ளது.

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பன இணக்கப்பாட்டை தெரிவித்ததன் பின்னர் உத்தேச முறைமையை நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் ஊடாக இலங்கை கடன் ஸ்திர நிலையை அடையும் இலக்கிற்கு செல்ல சந்தர்ப்பம் ஏற்படும் என லண்டன் பங்குச்சந்தை தெரிவித்துள்ளது.

இருதரப்பு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ குழு, இறையாண்மை முறி உரிமையாளர்கள், சீன எக்சிம் மற்றும் சீன அபிவிருத்தி வங்கியுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள கொள்கை இணக்கப்பாடுகளுக்கு அமைய இலங்கைக்கு 17 பில்லியன் டொலர் கடன் நிவாரணம் கிடைக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்தது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.