பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலை உறவினர்களிடம் கையளிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு புதுக்கடை இரண்டாம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2 வாரங்களுக்குள் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸார் கூறினர்.
பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்திற்குள் காருக்குள் கைகள் மற்றும் கழுத்து கட்டப்பட்ட நிலையில் தினேஷ் ஷாப்டரை அவரது நிறுவன அதிகாரி ஒருவர் மீட்டிருந்தார்.
தேசிய வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் இரவு அவர் உயிரிழந்தார்.
இலங்கையின் பிரபல வர்த்தகர்களில் ஒருவரான தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
அவரது மரணம் நிகழ்ந்திருந்த விதம் தொடர்பில் எழுந்த சர்ச்சைகளே அதற்கு காரணமாகும்.
கழுத்து இறுக்கப்பட்டமையே அவரது மரணத்திற்கான காரணம் என முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் சயனைட் என்ற நச்சுப்பொருள் உடலில் கலந்தமையும் அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போது தெரிவிக்கப்பட்டது.
சயனைட் விசம் அடங்கிய உணவை அவர் உட்கொண்டதாகவும் அவரது வயிற்றுப் பகுதியிலும் இரத்தத்திலும் அது கண்டறியப்பட்டதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கைகளில் முரண்பாடுகள் காரணப்படுவதாக தினேஷ் ஷாப்டரின் குடும்ப உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன அந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அசேல மென்டிஸ் தலைமையிலான ஐவர் அடங்கிய நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.
இதனை அடுத்தே அவரது சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.