பெரும்போகத்தில் நெற்செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் உர மானியத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க திறைசேரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய ஹெக்டேயருக்கு இதுவரை வழங்கப்பட்ட 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மானியம் விவசாயிகளுக்கு செயற்றிறனுடனும் திறம்படவும் கிடைக்கும் வகையில் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வைப்பிலிடப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சரியான விவசாய இடுபொருள் முகாமைத்துவத்திற்காக நியாயமான விலையில் உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களை வழங்குவதற்கும் சிறந்த விவசாய நடைமுறைகளுக்கேற்ப இரசாயன மற்றும் சேதனப் பசளை உள்ளிட்ட விவசாய இடுபொருட்களுக்கு மானியத்தை வழங்குவதற்கும் புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பின்னடவை சந்தித்துள்ள மீன்பிடித் தொழிலை ஊக்குவித்து உற்பத்திச் செலவை குறைப்பதற்காக ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீனவர்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆழ்கடல் மற்றும் நாளாந்த படகுகளுக்கு மாதாந்த அடிப்படையில் எரிபொருள் மானியத்தை வழங்குமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் திறைசேரிக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொடுப்பனவும் மீனவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளது.மீன்பிடித் தொழிலை நிலைபேறான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், அதனூடாக மீன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் நுகர்வோருக்கு நியாயமான விலை, மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் என்பன புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக தற்போது கடும் பின்னடைவை சந்தித்துவரும் மீன்பிடித் தொழிலை முன்னேற்றுவதற்கு நிதி மற்றும் தொழிநுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.