பெளத்தம் சிங்களத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல என ஸ்ரீ மகா விஹாரையின் பிரதம தேரர் மற்றும் அமெரிக்கா கலிபோர்னியா லொஸ் ஏஞ்சலஸ் தர்ம விஜய பெளத்த விகாரையின் ஸ்தாபக பிரதம தேரர் கலாநிதி பான்டே வல்பொல பியனந்த தேரர் தெரிவித்தார்.
தேரர் கலாநிதி பான்டே வல்பொல பியனந்த தேரரின் 80 அகவை நிறைவை ஸ்ரீமகாவிஹாரை பக்தர்களின் நிறைவேற்று சபையும், பெருந்தொகையான அண்மைய விகாராதிபதிகளும் இணைந்து பெளத்த தத்துவ நிகழ்வாக கொண்டாடினார்கள். இந்நிகழ்வில் விசேட அழைப்பின் பேரில் எம்பிக்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாகலே ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே தேரர் மேற்கண்டவாறு கூறினார்.
“பெளத்தம் என்பது சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அது முழு உலகிற்கும் சொந்தமானது. பெளத்த தர்ம வளர்ச்சிக்கு தமிழ் பெளத்தர்கள், தமிழ் சங்க காலம் தொட்டு பாரிய பங்களிப்புகளை வழங்கி உள்ளார்கள். அதையிட்டு நாம் பெருமை அடைய வேண்டும்.
கணிசமான பண்டைய தமிழ் சங்க கால அங்கத்தவர்கள் இவ்வுலகில் பெளத்தத்துக்கு பெரும் பங்களிப்புகள் வழங்கி உள்ளார்கள்.
முதலாவது வண. புத்தகோஷ மகா தேரர் மற்றும் வண. அனுருத்த மகா தேரர் ஆகியோர் அபிதர்ம காவியத்தை எழுதினார்கள்.
அமெரிக்காவிலும், ஆனந்த குமாரசுவாமி அவர்களே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பெளத்த கல்வியை, 1930 களில் போதிக்க ஆரம்பித்தார்.
ஆகவே பெளத்தம் என்பது சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அது உலகத்துக்கு சொந்தமானது. பண்டைய காலங்களில் தமிழ் சங்ககால அங்கத்தவர்களே பெளத்தத்தை வளர்த்து எடுத்தார்கள். இதை நாம் பெருமையுடன் கூறி வைக்க வேண்டும் என தெரிவித்தார்.