முல்லைத்தீவு நீதிபதி டி.சரவணராஜாவின் தீர்ப்பை திருத்தியமைக்குமாறு எவரேனும் அழுத்தம் கொடுத்திருந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யுமாறு எதிர்க்கட்சிகளுக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீதவானுக்கு தனது தீர்ப்பை மாற்றுமாறு அரசாங்கத்தின் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியமைக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
நீதித்துறையை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை. உரிய வசதிகளை செய்து கொடுப்பது மற்றும் சட்டங்களை இயற்றுவது மட்டுமே அரசாங்கத்தின் பணியாகும்.
அச்சுறுத்தல்கள் மற்றும் மன அழுத்தம் காரணமாக பதவி விலகியதாக நீதிபதி டி.சரவணராஜா நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்..
அவருக்கு அச்சுறுத்தல்கள் இருந்திருந்தால் அவர் நாட்டை விட்டு வெளியேறி முறைப்பாடு செய்யக்கூடாது. அரசியலமைப்பின் படி, அவருக்கு அச்சுத்தல் விடுத்த நபருக்கு நோட்டீஸ் அனுப்பவும், அவரை நீதிமன்றத்திற்கு வரவழைக்கவும் அல்லது கைது உத்தரவை பிறப்பிக்கவும் அதிகாரம் உள்ளது.
அவர் ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்து குற்றவாளியை தண்டிக்கலாம் அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை : அணுகலாம். அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் அவர் பொறுப்பேற்க வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
மாவட்ட நீதிமன்ற விவகாரங்களில் தலையீடு செய்ய அரசாங்கத்துக்கு அதிகாரம் இவ்லை எனவும் அமைச்சர் கூறினார்.