Sunday, November 24, 2024

Latest Posts

யாழில் இன்று மனித சங்கிலி போராட்டம்

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள மனிதசங்கிலிப் போராட்டத்துக்கு அனைவரையும் பங்களிப்பு செய்யவேண்டும் என யாழ். வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ். வணிகர் கழகம் இன்று மாலை வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“முல்லைத்தீவு டி.சரவணாவிற்கு நடந்த விடயம் நாட்டிலுள்ள அதியுச்ச இனவாதத்தின் வெளிப்பாடேயாகும். இந்த நாடு சுதந்திரம் அடைந்த பின்பு தமிழ் மக்கள் ஒதுக்கப்பட்டு அவர்களுடைய தமிழ்ப் பிரதேச நிலங்கள் பறிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து தமிழ் மக்கள் பல காலமாக போராடினார்கள். அது அகிம்சை, ஆயுதவழிப் போராட்டமாக நடைபெற்றது.

இந்த நாட்டிலே போர் நிறைவு பெற்று 14 வருடங்கள் கடந்து இருக்கின்ற நிலையில் கூட, தமிழ் மக்களுக்கும், தமிழ் தலைமைக்கும், சர்வதேசத்திற்கும் தீர்வு சம்பந்தமாக வழங்கிய உறுதிமொழிகள் எதுவும் அரசால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

ஆனால் அதற்குமாறாகத் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், தமிழ்பகுதிகளை ஆக்கிரமிப்பதும், பௌத்த சமயம் இல்லாத இடங்களிலும் மற்றும் தனியார் காணிகளிலும் பௌத்த கோயில்களை கட்டுவதும், நீதிமன்ற உத்தரவுகளையும், சட்டத்தினையும் மீறி செயற்படுவதும் அன்றாட நிகழ்வாக நடந்தேறி வருகிறது.

இதனை தடுக்க முற்படுவோருக்கு, அல்லது இதற்கு எதிராக போராடுபவர்களுக்கும் எதிராக பல அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையிலே நீதி, சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட முற்பட்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கும் அதே அழுத்தமும் அச்சுறுத்தலுமான நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் இது எல்லாவற்றிக்கும் ஒரே தீர்வாக பொலிஸ் காணி அதிகாரத்திற்கு அப்பால் நீதித்துறையும், சட்டமாஅதிபர் திணைக்களமும் உட்பட பூரண சுயாட்சி அதிகாரமுள்ள ஒரு தீர்வே எமக்குத் தேவை என்பதை கடந்தகால செயற்பாடுகள் எமக்குப் புலப்படுத்துகின்றது.

அத்துடன், அந்தத் தீர்வை நோக்கி நகர்வதற்கு ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும் அரசியல்கட்சித் தலைமைகளும் ஒன்றாக இணைந்து புத்திசாதுரியமாக செயற்படுவதே ஒரு சிறந்த வழியாகும்.

தமிழ் மக்கள் நீண்டகாலமாக இந்நாட்டில் தமது உரிமைக்காக ஏன் போராடுகிறார்கள் , என்பது ஜனநாயக ரீதியிலும், மனித உரிமைகளை மதிக்கும் சிங்கள மக்களுக்கும் , சர்வதேசத்திற்கும் கடந்த கால சம்பவங்கள் புலப்படுத்தியிருக்கும் என்று நாம் கருதுகிறோம்.

ஜனநாயக ரீதியிலும், மனித உரிமையை மதிக்கும் சிங்கள மக்களும், சர்வதேசமும் தற்போது விரைந்து தமிழ் மக்களுக்கான அதிகாரம் உள்ள தீர்வை வழங்க முன்வர வேண்டும்.

அத்துடன் பொருளாதாரத்தில் வீழ்ச்சியுற்றிருக்கும் இந்த நாட்டினைக் கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வும், இன ஒற்றுமையும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். நாளை நடைபெறும் மனிதசங்கிலிப் போராட்டத்துக்கு அனைவரையும் பங்களிப்பு செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.