“நாட்டின் வருவாயை அதிகரிக்க வரிக் கட்டமைப்பை மாற்ற வேண்டும்.ஒரு அரசாக செலவழிக்கும் போது தேவையை இலக்காகக் கொண்டு செலவழிக்க வேண்டும்.அவை சரியான காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
யார் ஆட்சி செய்தாலும் மக்களுக்கு ஏற்படும் அழுத்தங்களையும் அசௌகரியங்களையும் குறைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என சஜித் பிரேமதாஸ குறிப்பிடுகிறார்.
என்றாலும், இந்த அரசாங்கத்தில் சமூக பாதுகாப்பு திட்டமொன்று இல்லை எனவும், ராஜபக்ச குடும்பத்தை பாதுகாத்தல் மற்றும் அமைச்சுகளை பகிர்ந்து கொள்ளும் திட்டமே உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
நாட்டை வங்குரோத்தடையச் செய்த குடும்பத்தின் நாமல் ராஜபக்ச தவிசாளராக பதவி வகிக்கும் தேசிய பேரவைக்கு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு, நாட்டின் கொள்கை முன்னுரிமைகளை உருவாக்குவதற்குத் தேவையான குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இது நகைப்புக்குரிய விடயம் என்றும்,நாட்டை அழித்த ராஜபக்சவிடமிருந்து தீர்வுகள் காண வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவர்கள் மக்களை ஏமாற்றிய வன்னம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசப்பட்ட எதையும் இந்த அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்துவதாக இல்லை எனவும்,அவர்கள் தங்களுக்கு நன்மை பயக்கும் பகுதியை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள் எனவும்,சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் பிரகாரமே அமைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்களிடம் பொய் சொல்லாமல் 2.9 பில்லியன் டொலர்களை எமது நாட்டிற்கு பெறத் தேவையான ஆதரவை கோரினால் அதை வழங்குவதாகவும்,அப்படி இல்லாமல், நாட்டுக்கு பொய் சொல்லி,எங்களிடம் உதவி கோரினால்,அதற்கு எவ்விதத்திலும் சம்மதிக்கவே மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் யட்டிநுவர தேர்தல் தொகுதிக் கூட்டம் இடம் பெற்றது. இக்கூட்டத்தினை ஐக்கிய மக்கள் சக்தியின் யட்டிநுவர தொகுதி அமைப்பாளர் கெமுனு அபயசுந்தர ஏற்பாடு செய்திருந்தார்.