Saturday, November 9, 2024

Latest Posts

காங்கேசன்துறையை வந்தடைந்த செரியாபாணி கப்பல்

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இன்று காலை 8 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த செரியாபாணி கப்பலில் 50 பயணிகள் மற்றும் ஊழியர்கள் காங்கேசன்துறையை வந்தடைந்தனர். பிற்பகல் 12.20 மணியளவில் கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

செரியாபாணி கப்பலை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு வரவேற்கும் நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் பச்சை கொடி அசைத்து மீண்டும் இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகம் நோக்கி 31 பயணிகளுடன் கப்பல் மதியம் 1.15 மணியளவில் புறப்பட்டது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்ததுடன், நாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆரம்ப விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து கப்பலின் பயணத்தை ஆரம்பித்து வைத்தனர்.

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான கப்பலில் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழிக் கட்டணமாக 27,000 ரூபாவும் இருவழிக்கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளதுடன், 50 கிலோகிராம் வரை இலவசமாக பொருட்களை எடுத்துச்செல்லலாம்.

இறுதியாக 1984 ஆம் ஆண்டு தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் கப்பல் சேவை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

40 வருடங்களின் பின்னர் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இந்த கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.