உள்ளூராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்தாமல் ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளன.
இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தனித்து நிற்பதைவிட ஒன்றிணைந்து போராடுவதே நடைமுறைச் சாத்தியம் என எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானித்துள்ளன.
சுதந்திர மக்கள் சபை, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, பிவுத்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜ கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலையீட்டில் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் நீதிமன்றத்தை அணுகுவதற்கு சட்டத்தரணிகள் குழுவுடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் கடந்த வருடம் நிறைவடைந்த நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் வரை அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஜனாதிபதியின் அறிக்கையினால் தேர்தல் முறை திருத்தம் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் குறைப்பு என்பனவற்றை அரசாங்கம் ஒத்திவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சி நம்புகிறது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.