நாட்டின் சில பிரதேசங்களில் இன்று(17) பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை, காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி,கேகாலை, மாத்தறை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் மண்மேடு சரிந்து வீழ்தல், பாறைகள் வீழ்தல், நிலம் தாழிறங்குதல் உள்ளிட்ட நிலைமைகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.