தேர்தல் திகதி அரசியலமைப்புக்கு எதிரானதா?

0
120

நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் “நாம் இலங்கை தேசிய அமைப்பின்” அழைப்பாளருமான எச். எம். பிரியந்த ஹேரத் அவர்களினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சார்பில் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10ஆவது பிரிவின்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான திகதி ஒக்டோபர் 4 முதல் ஒக்டோபர் 11 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல்கள் சட்டத்தின்படி, ஐந்து வாரங்களுக்கு குறையாமலும், வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நாளிலிருந்து ஏழு வாரங்களுக்கு மிகையாகாமலும் வாக்குப்பதிவுக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும்.

அதன்படி, வேட்புமனு ஏற்கும் பணி முடிவடையும் ஒக்டோபர் 11ஆம் தேதி முதல் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15ஆம் தேதியும், ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடையும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் 14ஆம் திகதி, அந்த சட்டக் காலப்பகுதியில் உள்ளடக்கப்படாததால், அன்றைய தினம் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தவறு குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரிவித்தும் பலனில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மக்களின் இறையாண்மை மீறப்படுவதாகவும், அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகவும் தீர்ப்பளிக்க வேண்டும் என மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட விடயத்தை சரிசெய்வதற்கு ஏற்ற உத்தரவாக இருந்தால், உயர் நீதிமன்றம் அத்தகைய உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here