விவசாய அமைச்சில் உர விநியோகத்திற்கு பொறுப்பாகவிருந்த உயரதிகாரிகள் இருவரை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
பெரும்போகத்தில், விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கி 3 மாதங்கள் கடந்தும் இதுவரை விலை மனு கோருவதற்கு நடவடிக்கை எடுக்காமையே இதற்கான காரணமாகும்.
பல நாடுகளுக்கிடையே நிலவும் மோதல்கள் காரணமாக உலக சந்தையில் யூரியா உள்ளிட்ட அனைத்து உரங்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சரவையின் அனுமதி கிடைத்த மே மாதத்தில் உரம் கொள்வனவு செய்யப்பட்டிருந்தால், யூரியா உரத்தை மிகக் குறைந்த விலையில் கொள்வனவு செய்திருக்க முடியும் என விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த காலகட்டத்தில், ஒரு மெட்ரிக் தொன் யூரியாவை 350 டொலருக்கு கொள்வனவு செய்திருக்கலாம்.எனினும், தற்போது ஒரு மெட்ரிக் தொன் யூரியா 650 டொலர் வரை அதிகரித்துள்ளது.
இதனால் அரசாங்கத்திற்கு பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு கூறியுள்ளது.இதேவேளை, எதிர்வரும் போகத்தில் உரத்தின் விலை அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சீன உர விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், உரத்தின் விலை அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க கூறினார்.
இம்முறை போகத்திற்கு தேவையான யூரியா உரம், போதுமானளவு கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் யூரியா உரம் நாட்டிற்கு கிடைக்கும் எனவும் விவசாய அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.