Thursday, November 21, 2024

Latest Posts

சர்வதேசத்திடமிருந்து நீதியைஒருபோதும் எதிர்பார்க்காதீர்கள்

“வெளிநாட்டுத் தலையீடின் கீழ் எங்களுடைய நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. வெளிநாட்டு நீதிமன்றங்கள் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்கின்றோம். சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி உதைத்து விட்டு இன்று உலக நாடுகள் செயற்படுகின்றன.”

  • இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய மக்கள் சக்தி சிங்களக் கட்சி என்ற ஒரு குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றது. நாங்கள் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் எமது க ட்சி வேட்பாளர்கள் அனைவரும் யாழ்ப்பாணம், கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.

இதேபோல் எங்கள் மேல் மற்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியானது சர்வதேச விசாரணைக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. எங்கள் மேல் விமர்சனங்களை முன்வைப்பவர்களிடம் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். அமைச்சரவைத் தீர்மானங்களை முழுமையாக வாசித்து விட்டு எங்கள் மீது விமர்சனங்களை முன்வையுங்கள்.

எங்களுக்கு எதிராக தமிழ் மக்களிடம் கூறுவதற்கு எந்த விடயமும் கிடையாது. இதனால் சர்வதேச விசாரணை என்ற விடயத்தை இவர்கள் கையில் எடுத்திருக்கின்றார்கள். தமிழ் மக்களை இனவாத ரீதியாகச் சூடாக்கி அதில் குளிர்காய்கின்ற வேலையைத் தமிழ்க் கட்சிகள் செய்து வருகின்றன. எங்கள் மீது இனவாத சாயத்தைப் பூசுகின்ற நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கியுள்ளார்கள்.

வெளிநாட்டுத் தலையீட்டின் கீழ் எங்களுடைய நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. வெளிநாட்டு நீதிமன்றங்கள் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்கின்றோம். சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி உதைத்து விட்டு இன்று உலக நாடுகள் செயற்படுகின்றன. உதாரணமாக பலஸ்தீன பிரச்சினையைக் குறிப்பிடலாம். அங்கு இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கியுள்ளபோதும் அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது.

இப்படியான நிலைமை காணப்படுகையில் சர்வதேச நீதிமன்றத்திடம் சென்று நீதியைப் பெறுவது என்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதற்கு ஒப்பானது.

மேலும், புலம்பெயர் தமிழர்களிடமும் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம். ஒரு சில அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தாங்கள் புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் எனக் கூறி அரசியல் சித்து விளையாட்டுக்களை மேற்கொள்கின்றார்கள்.

குறித்த கட்சிகளுக்கு எவ்வாறு நிதி சேகரிப்பு நடைபெறுகின்றன என்பது சந்தேகத்துக்கிடமானதாகும். வெளிநாடுகளில் இருந்து பணத்தைக் கொண்டு வந்து 70 வருடங்களுக்கு மேலான போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகின்ற கீழ்த்தரமான அரசியலை சில கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் செய்கின்றன. இவை அருவருக்கத்தக்க செயற்பாடுகளாகும். எனவேள், புலம்பெயர் தமிழர்களிடம் ஒன்றைக் கேட்டுக்கொள்கின்றோம் உங்களுடைய பெயரைத் துஷ்பிரயோகம் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.