அரசியல், பொருளாதார ரீதியாக உறுதித்தன்மையற்றிருக்கும் இந்த நாடு, மீட்சியற்ற நிலையில் அழிவைநோக்கிச் சென்றுகொண்டிருப்பதைத்தான், நாளாந்தம் நாட்டைவிட்டு வெளியேறும் துறைசார் நிபுணர்கள், வல்லுனர்கள் மற்றும் புத்திஜீவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு பறைசாற்றி நிற்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தனியார் நிறுவனம் ஒன்றின் 30 ஆவது ஆண்டு நிறைவுவிழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
நிகழ்வில் மேலும் அவர் உரையாற்றுகையில், ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டுள்ள போதும், இலங்கையின் வடக்கு, கிழக்கில் உலகத்தரம் வாய்ந்த மென்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையில் கோலோச்சி வரும் தனியார் நிறுவனம் ஏராளமான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு எனும் வரப்பிரசாதத்தை வழங்கிவரும் நிறுவனமாகவும் முன்னிலை வகிக்கிறது.
இத்தகைய தொழில்நுட்ப வாய்ப்புகளை எமது பிள்ளைகள் முறையாகப் பயன்படுத்தி, தமது துறைசார் அறிவையும் வல்லமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.