Tuesday, September 17, 2024

Latest Posts

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதான நால்வர் பிணையில் விடுதலை! – சட்டத் திருத்தம் குறித்து சட்டத்தரணி சுரங்க பண்டாரவுடன் சிறப்பு செவ்வி

உலகில் உள்ள  அனைத்து வகையான சட்டங்களிலும் ஒப்பிடுகையில் இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் மிகவும்  கொடூரமானது எனவும் மூர்க்கத்தனமானது எனவும் மனித உரிமைகள் சட்டத்தரணி சுரங்க பண்டார தெரிவிக்கிறார்.

லங்கா நியூஸ் வெப் இணையத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி சுரங்க பண்டாரவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு,   

01.பயங்கரவாத தடைச் சட்டத்தில் புதிதாக திருத்தம் செய்த பின் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த யாரேனும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்களா?  

ஆம், பிணையில் விடுதலைப் பெற்றுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொலை முயற்சி சதி வழங்கில் நான்கு சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அது மாத்திரமன்றி மேன்முறையீட்டு நீதிமன்றிலும் சிலருக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மனித உரிமை விடயங்கள் தொடர்பில் முன்வந்து வழக்கு விசாரணைகளில் ஆஜராகும் சட்டத்தரணி என்ற அடிப்படையில் பயங்கரவாத தடை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய திருத்தம் மற்றும் அதன் தன்மை குறித்த உங்கள் கருத்து என்ன?                                                                                                                          1979 கொண்டு வரப்பட்ட சட்டம் 1980களில் திருத்தம் செய்யப்பட்டது. அந்த திருத்தத்தில் நீதவான் நீதிமன்றில் விசாரணை மட்டத்தில், பி அறிக்கை அளவில் விசாரணை இருக்கும் போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால் சட்ட மா அதிபரின் விருப்பத்தின் படி பிணைபெற்றுக் கொள்ள முடியும். ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்படுவார். வழக்கு முடியும் வரை அவருக்கு பிணை பெற முடியாது. எனக்கு தெரிந்தமட்டில்  உலகில் இந்த அளவு மூர்க்கத்தனமான சட்டம் வேறு எங்கும் இல்லை. சந்தேகநபர்களுக்கு பிணை பெற வசதி இல்லாத கொடூர சட்டம் இது. அதனால் தான் இதனை மிகவும் அபாயகரமான சட்டமாக நாம் பார்க்கிறோம்.

2022இல் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மேல் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பிணை வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. விசேட காரணங்களுக்காக மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்க முடியும். மேலும் கைது செய்யப்பட்டு ஒரு வருடங்களில் வழக்கு  தாக்கல் செய்யப்படாவிட்டால் மேன்மறையீட்டு நீதிமன்றில் பிணை பெற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது.  இந்த இரண்டு திருத்தங்களும் சட்டத்தில் புதிதாக செய்யப்பட்டுள்ளது.

பிணை வழங்குவதில் மாத்திரமே திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வாக்குமூலம் என்ற விடயத்தில் மிகவும் அபாயமான ஏற்பாடுகள் உள்ளன. மூன்று வகை வாக்குமூலங்கள் உள்ளன. ஒன்று குற்றவியல் சட்டத்தின் 127ம் இலக்க சரத்தின்படி நீதவானுக்கு வழங்கப்படும் வாக்குமூலம். இரண்டு உதவி பொலிஸ் அதிகாரி அல்லது அதற்கு மேல் உயர் பதவி வகிக்கும் பொலிஸ் அதிகாரிக்கு வழங்கும் வாக்குமூலம். மூன்றாவது எழுத்துமூலம் நீதவானுக்கு வழங்கப்படும் வாக்குமூலம்.  இந்த வாக்குமூலங்களில் உள்ள அபாயம் என்னவென்றால் சந்தேகநபர் துன்புறுத்தப்பட்டு தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்படலாம். அதற்கு பல சாட்சிகள் உள்ளன. அது போல நீதவானுக்கு வழங்கப்படும் எழுத்து மூல வாக்குமூலமும் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து பெறப்படலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பிணை பெற்றுக் கொள்ள வாய்ப்பே  கிடையாது. தண்டனை வழங்கவே அதிக வாய்ப்பு உள்ளது. எழுத்துமூலம் நீதவானுக்கு வழங்கப்படும் வாக்குமூலம் தொடர்பில் சாட்சி பதிவு செய்ய வேண்டிய அவசியமி​ல்லை. நேரடியாக அதனை தீர்ப்பு வழங்க பயன்படுத்த முடியும். இது மிகவும் அபாயகரமான ஒன்றாகும். எனவே உலகில் சாதாரணமாக  ஏற்றுக் கொள்ளப்படும் சட்டங்களுக்கு  அப்பால் சென்ற அபாயகரமான மூர்க்கத்தனமான சட்டமாக பயங்கரவாத தடை சட்டம் காணப்படுகிறது.

இந்த சட்டத் திருத்த்தின் ஊடாக ஏதேனும் பயனுள்ளதா?

இ​ல்லை என்று சொல்ல முடியாது. பிணை வழங்கும் விடயத்தில் இரண்டு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அது ஒரு சாதகமான நிலை. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்களுக்கு பிணை வழங்கும் ஏற்பாடு இதற்கு முன்னர் இருக்கவில்லை. ஆனாலும் பிணை வழங்குவதற்கு மேலதிகமாக  அபாயகரமான ஏற்பாடுகள் இந்த சட்டத்தில் உள்ளன.

இந்த திருத்தம் கொண்டு வரப்பட்ட பின் பல வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனரா? அதற்கு ஏதேனும் நிபந்தனை அல்லது சிக்கல் உள்ளதா?  

பிணை வழங்கும் அதிகாரம் மேல்  மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதால் அவர்களை பிணையில் விடுதலை செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனால்  அதற்கான பொருளாதார நிலைமை  அந்த கைதிகளுக்கு இருக்கிறதா என நாம்  ஆராய்ந்து  பார்க்க வேண்டும். பலருக்கு நிதி பற்றாக்குறை இருப்பதால் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். சிலருக்கு தொண்டு நிறுவனங்கள் உதவி செய்கின்றன. 18 வருடங்களுக்கு மேல் விளக்கமறியலில் உள்ளவர்கள்  பிணையில் வெளியில் வர வாய்ப்பு இருந்தும் சட்ட உதவி இன்றி நிதி உதவி இன்றி தொடர்ந்து  விளக்கமறியலில் இருக்க வேண்டிய நிலை  ஏற்பட்டுள்ளது. அதனால் போதுமான நிதி உதவி மற்றும் சரியான சட்ட உதவி இருந்தால் நிச்சயமாக அவர்களை பிணையில் விடுவித்துக் கொள்ள முடியும்.  

இவ்வாறு பிணை பெற்றுக் கொள்ள செலவாகும் தொ​கை பற்றி கூற முடியுமா..?

இலவச சட்ட உதவிகளை செய்து கொடுக்க பல மனித உரிமை சட்டத்தரணிகள் உள்ளனர்.  ஆனால் பிணை நிபந்தனையாக நீதிமன்றத்தினால் விதிக்கப்படும் தொகையை செலுத்த முடியாத நிலை பல கைதிகளுக்கு காணப்படுகிறது. அதனால் ஒன்று அல்லது இரண்டு லட்சம் ரூபா தேவைப்படும். பொது அமைப்புகளின் உதவிகள் கிடைத்தால் இவர்களை பிணையில் விடுவித்துக் கொள்ள  முடியும்.

குறிப்பு – இது விடயம் தொடர்பில் சட்ட உதவிகள் தேவைப்படின் 0777950200 (மனித உரிமை சட்டத்தரணி சுரங்க பண்டார) என்ற இலக்கத்திற்கு    தொடர்பு கொள்ளலாம்.

  • ப.வி    

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.