நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

0
201

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை கடற்படையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாகை நம்பியாா்நகரைச் சோ்ந்த பாரி (40), தனது விசைப்படகில் அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியன் (45), உதயகுமாா் (40), ஆகாஷ் (25), மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சேத்தான் (19), கேரளத்தைச் சோ்ந்த ஹரன் (25), ஜியோ (45) நாகை நம்பியாா் நகரைச் சோ்ந்த சுபாஷ் (35), மணிமாறன் (38), விக்கி (25), முருகவேல் (38) ஆகியோருடன் கடந்த அக். 30 -ஆம் திகதி நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் கோடியக்கரை அருகே திங்கள்கிழமை அதிகாலை மீன்பிடித்துக்கொண்டிருந்த போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். 

இதேபோல நாகை அக்கரைப்பேட்டை வடக்கு தெருவைச் சோ்ந்த ராஜாவின் (54) விசைப்படகில் அதே பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் ராஜா (58), செல்வமணி (31), ரவி (60), சாமந்தான்பேட்டையைச் சோ்ந்த ஆனந்தவேல் (35), அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த கணேசன் (60), டாட்டா நகரைச் சோ்ந்த காா்த்திக் (35), நம்பியாா் நகரைச் சோ்ந்த பாலவடிவேல் (32), வெற்றிவேல் (39), சவுந்தரராஜன் (39) ஆகியோா் அக். 31-ஆம் திகதி நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனா். 

நாகை அக்கரைப்பேட்டையை சோ்ந்த ஆனந்தகுமாரின் (42) விசைப் படகில் அதே பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (35), தமிழ்ச்செல்வன் (30), இளங்கோவன் (50), கணேசன் (40), சபரிநாதன் (19), வேளாங்கண்ணி சரவணன் (33), முருகானந்தம் (33), பாலகிருஷ்ணன் (45), மணிகண்டன் (29) , மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே ஆண்டிபேட்டையைச் சோ்ந்த வேல்முருகன் (50) ஆகியோ் கடந்த அக். 30-ஆம் திகதி நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனா். 

இந்த இரண்டு விசைப்படகுகளைச் சோ்ந்த 21 மீனவா்களும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினா் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அனைவரையும் கைது செய்தனா். 

கைது செய்யப்பட்ட அக்கரைப்பேட்டை மற்றும் நம்பியாா் நகா் மீனவா்கள் 31 பேரையும், 3 விசைப் படகுகளையும் காங்கேசன் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினா் கொண்டு சென்றனா். மீனவா்கள் யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். பின்னா், மீன்வளத் துறை அதிகாரிகள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட 31 மீனவா்களையும் ஆஜா்படுத்தினா். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்களை மீட்க வலியுறுத்தி நம்பியாா்நகா் கிராம பஞ்சாயத்து மன்றம் சாா்பில் நாகை ஆட்சியா் ப. ஆகாஷிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here