Sunday, November 24, 2024

Latest Posts

ட்ரம்ப் முன்னிலை, கமலாவுக்கு பின்னடைவு – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நிலவரம்


வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.

இதுவரை அவர் 24 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிஸ் 15 மாகாணங்களை வசப்படுத்தி உள்ளார்.

எந்தெந்த மாகாணங்களில் யார் வெற்றி? டெக்சாஸ், ஓஹியோ, நெப்ராஸ்கா, நார்த் டகோடா, சவுத் டகோடா, லூசியானா, வயோமிங், இண்டியானா, கெண்டக்கி, அலபாமா, மிஸ்ஸிசிபி, ஃப்ளோரிடா உள்ளிட்ட 24 மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஸ்விங் மாகாணங்களில் வடக்கு கரோலினாவைத் தொடர்ந்து ஜார்ஜியா மாகாணத்தையும் ட்ரம்ப் கைப்பற்றியுள்ளார்.

வெர்மாண்ட், மாசசூசெட்ஸ், ரோட்ஸ் ஐலாண்ட், கனெடிகட் உள்ளிட்ட 15 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். கூடவே அதிக எலக்டோரல் காலேஜ் கொண்ட கலிபோர்னியா மாகாணத்தையும் கமலா ஹாரிஸ் கைப்பற்றியுள்ளார்.

எலெக்டோரல் காலேஜ் (வாக்காளர் குழு) பொறுத்தவரையில் ட்ரம்ப முன்னிலை பெற்றுள்ளார். அவருக்கு இதுவரை 246 வாக்காளர் குழு ஆதரவு கிடைத்துள்ளது. கமலா ஹாரிஸ் 187 பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர் குழு) நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த நாட்டில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். சிறிய மாகாணங்களில் 1 முதல் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வரை வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும். அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி, ட்ரம்ப் 246, கமலா ஹாரிஸ் 187 என்ற எண்ணிக்கையை வசப்படுத்தி உள்ளனர்.

ஒரு மாகாணத்தில் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றால், அந்த மாகாணத்தின் ‘எலக்டோரல் காலேஜ்’ வாக்குகள் முழுவதும் வெற்றி வேட்பாளரை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாகாண வாரியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: ஜனாதிபதி தேர்தலுடன் அந்த நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 435 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்த அவையில் பெரும்பான்மையை எட்ட 218 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலவரப்படி, ட்ரம்பின் குடியரசுக் கட்சி 190 தொகுதிகளையும், கமலா ஹாரிஸின் ஜனநாயகக் கட்சி 154 தொகுதிகளையும் வசப்படுத்துகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 186 மில்லியன் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்றது. அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமார் 95 சதவீத இடங்களில் வாக்கு சீட்டு நடைமுறையிலும், மீதமுள்ள 5 சதவீத இடங்களில் மின்னணு முறையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி உள்ளது. இதன்படி வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே 8.2 கோடி பேர் வாக்களித்திருந்தனர். அதாவது 40 சதவீதம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர். மீதமுள்ள வாக்காளர்கள் நேற்று தங்கள் வாக்கை செலுத்தினர்.

அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளருக்கு மக்கள் நேரடியாக வாக்களிப்பது இல்லை. அதற்கு பதிலாக ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர் குழு) உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளர், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.