அபிவிருத்தி மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ள மலையக மக்களை அரசியல் ரீதியாகவும் பின்தள்ள சதித்திட்டங்கள் முன்டுனேடுக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு கூறினார்.
தற்போது எல்லை நிர்ணய சபை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த சபைக்கு முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் நியமிக்கப்பட்டுள்ள ஏனைய உறுப்பினர்களை நாங்கள் உற்று நோக்கினால் பெரும்பான்மை மக்கள் சார்பாக இருவரும், வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் பேசுவதற்காக ஒருவரும், சிறுபான்மை முஸ்லிம் மக்கள் சார்பில் பேசுவதற்காக ஒருவரும், இந்த குழுவிலே நியமிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் வடக்கு கிழக்குக்கு வெளியே சுமார் 15 லட்சம் மக்களைக் கொண்ட இந்திய வம்சாவளி மலையக தமிழர்களுடைய நலன்கள் தொடர்பில் பேசுவதற்கு இந்த குழுவிலே ஒருவர் கூட நியமிக்கப்படாமை மிகவும் வருத்தம் தரக்கூடிய விடயமாக இருக்கிறது.
குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் அதிகளாவான மக்கள் தொகை கொண்ட பிரதேச சபைகளும், பிரதேச செயலகங்களும், அதிக மக்கள் தொகை கொண்ட கிராம சேவகர் பிரிவுகளும் காணப்படுகின்றனர்.
அதிக மக்கள் தொகை கொண்ட கிராம சேவகர் பிரிவுகளை முறையாக எல்லை நிர்ணயம் செய்து இந்த நாட்டிலே ஏனைய பகுதிகளில் இருக்கின்ற கிராம சேவகர் பிரிவுகளை போன்று – நியாயமான மக்கள் தொகையுடன் கிராம சேவகர் பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அப்போதுதான், இந்த மக்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் நிவாரண திட்டங்கள், சமூர்த்தி போன்ற அனைத்தையும் முறையாக பெற்றுக் கொடுக்க முடியும்.
அதிக கிராம சேவைகள் பிரிவுகள் இல்லாமையும், ஒவ்வொரு கிராம சேவர் பிரிவுகளிலும் அதிகளவான மக்கள் தொகை காணப்படுவதும் – சமுர்த்தி கொடுப்பன்வு நியாயமாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், சமுர்த்தி கொடுப்பனவு பெற வேண்டியவர்கள் பலர் அந்த கொடுப்பனவினை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த எல்லை நிர்ணய குழுவில் மலையக மக்கள் ஒருவர் நிச்சயமாக நியமிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.