2024இல் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை

0
197

இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஈடுபடுபவர்கள் மற்றும் சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கான அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்கள் நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு உண்மையான ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்றும் கூறியுள்ளார் கர்தினால் மால்கம் இரஞ்சித் ஆண்டகை.

அண்மையில் நடைபெற்ற Ad Limina Apostolorum என்னும் திருத்தந்தையுடனான ஆயர்கள் சந்திப்பை முன்னிட்டு உரோமிற்கு வருகை தந்துள்ள கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் ஆண்டகை இலங்கயின் தற்போதைய நிலை குறித்து பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அண்மைய ஆண்டுகளில் இலங்கையானது அரசியல், சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் சூழலில் நாட்டின் நிலைமையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், மக்களிடையே அமைதியற்ற சூழலையும் அதிருப்தியையும் உருவாக்கும் நோக்கத்தில் கடுமையான சமூகக் கட்டுப்பாட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

நாட்டில் ஜனநாயக சூழலை உருவாக்கவும் சாதாரணமாக நடைமுறைப்படுத்தவும் கடுமையான இடையூறுகளை அனுபவித்து வருவதாக எடுத்துரைத்துள்ள கர்தினால் இரஞ்சித், பாதிக்கப்படும் கத்தோலிக்க மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இலங்கை நாட்டில் வாழும் மக்களையும் நினைவுகூர்வதாக எடுத்துரைத்துள்ளார்.

சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் நாளொன்றிற்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்ணும் சூழலில் இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் வாழும் பௌத்தர்கள், இந்துக்கள் என அனைத்து மதத்தலைவர்களுடனான உரையாடலில் ஒன்றிணைந்து நல்லுறவைப் பேணிக்காப்பதாக எடுத்துரைத்துள்ள கர்தினால் இரஞ்சித், இப்பாதை கடினமானதாகத் தோன்றினாலும் தொடர்ந்து தங்களது பங்கைச் செய்வோம், எப்போதும் மக்கள் பக்கம் இருப்போம் என்றும், நம்பிக்கையுடன் பொதுநலனுக்காக உழைத்து, நற்செய்தியின் உண்மைக்கு சாட்சியாக இருப்போம் என்றும் கூறியுள்ளார்.

இலங்கை அரசிற்கு எதிரான அணிவகுப்பு, சமூகப் போராட்டம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இராணுவத்தை நிலைநிறுத்தும் அரசின் செயல்களை சுட்டிக்காட்டியுள்ள கர்தினால், 2024 இல் திட்டமிடப்பட்டுள்ள அரசியல் தேர்தல்கள் மிக முக்கியமானதாகவும், மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாகவும் அமையும் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here