முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்குச் சொந்தமான சொகுசு ஜீப் நேற்று (நவம்பர் 11) மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜீப்பை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் காவலில் எடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று பிற்பகல் உத்தரவு பிறப்பித்ததையடுத்தே இந்த நடவடிக்கை இடம்பெற்றது.
இந்த ஜீப் இலங்கையில் சட்டவிரோதமான முறையில் பொருத்தம் செய்யப்பட்டதாக கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சுஜீவ சேனசிங்க அண்மையில் அரசாங்க பரிசோதகரிடம் முன்னிலைப்படுத்த ஏற்பாடு செய்திருந்தார்.
இதேவேளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொது முறைப்பாடு விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பித்ததோடு, இந்த ஜீப் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா 2010 இல் சுங்கவரி இல்லாத வாகன அனுமதி மூலம் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார்.
ஸ்ரீ ரங்கா இந்த ஜீப்பைப் பதிவு செய்யாமல் பல மாதங்களாகப் பயன்படுத்தியதாகவும், 2011 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் திகதி செட்டிகுளம் பகுதியில் விபத்துக்குள்ளானதாகவும் தெரிவித்தனர்.
களனியில் வைத்து சில பாகங்கள் சேர்க்கப்பட்டதாகவும் 2022 சுஜீவ சேனசிங்க பெயரில் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
எனவே, இந்த ஜீப் இன்னும் நிலுவையில் உள்ள சர்ச்சைக்குரிய வழக்கு பொருள் என்று கூறிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ஜீப் அழிக்கப்படும் அல்லது மறைத்து வைக்கப்படும் அபாயம் உள்ளதால் அதை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மைகளை பரிசீலித்த கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி, குறித்த ஜீப்பை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் காவலில் எடுத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.