பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடுமுழுவதும் தேர்தல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், தேவையற்ற வகையில் பொது மக்கள் ஒன்று கூடல்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வாக்குச் சாவடிகள், வாக்கு எண்ணும் மத்திய நிலையங்கள் மற்றும் பொது மக்களின் வாதுகாப்புக்காக 70ஆயிரம் பொலிஸாரும் 20ஆயிரம் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்களித்தப் பின்னர் பொது மக்கள் தமது வீடுகளில் சென்று இருக்குமாறும், ஒன்றுகூடி தொலைகாட்சிகளை பார்க்காது தமது வீடுகளிலேயே இருக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
தேர்தல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொள்பவர்கள் மற்றும் வாக்குச் சாவடிகளுக்கு அண்மித்த பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப்படுவார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்படுபவர்கள் குற்றங்களில் அடிப்படையில் சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதுடன், 7 வருடம் வரை அவர்களது வாக்குரிமையை பறிப்பதற்கான சந்தர்ப்பங்களும் இருப்பதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
தேர்தல் கடமைகளுக்காக 64,000 பொலிஸ் அதிகாரிகளும், 3,200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும், 12,227 சிவில் பாதுகாப்பு பணியாளர்களும், 11,000 இராணுவ வீரர்களும் நேரடியாக தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடைபெறும் நாளிலும் அதற்குப் பின்னரும் பொலிஸ் அதிகாரிகளும், பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு அனைத்து தரப்பினரிடமும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.