உள்ளூராட்சித் தேர்தலை நடத்த கூடாது – இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறுஉயர்நீதிமன்றில் மனு தாக்கல்

0
127

இடைநிறுத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை புதிய வேட்புமனுக்களை கோராமல் நடத்தக் கூடாதென்ற உத்தரவை தேர்தல் ஆணைக்குழுவுக்கு பிறபிக்குமாறு உயர்‌ நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் இடாபில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட இளைஞர்கள், யுவதிகளை கொண்ட ஒரு குழுவால் இந்த மனு கடந்த திங்கட்கிழமை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவானது சட்டத்தரணி எம்.ஐ.எம் ஐனுல்லாவால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் வாதாட உள்ளார்.

இடைநிறுத்தப்பட்ட உள்ளூராட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பணித்துள்ளது.

இதனை அடுத்து தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடனே நடத்துவதாக உத்தரவாதம் அளித்திருந்தது.

ஏற்கனவே கோரப்பட்ட வேட்புமனுவின் பிரகாரம் தேர்தல் நடத்தப்பட்டால் தாம் இந்த தேர்தலில் போட்டியிட முடியாதென மனுவை தாக்கல் செய்துள்ள இளைஞர், யுவதிகள் குழு கூறியுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பிலேயே தமது பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே பெறப்பட்ட வேட்புமனுவானது தங்களுக்கு வாக்குரிமை இல்லாத சந்தர்ப்பத்தில் கோரப்பட்டிருந்தது. தற்போது தமக்கு வாக்குரிமை உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பமும் எமக்கு கிடைக்க வேண்டுமென குறித்த குழு இந்த மனுவில் கூறியுள்ளது.

இதனால் தங்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள குழு, புதிய வேட்பு மனு கோராமல் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது, தாங்கள் போட்டியிடும் உரிமையை மீறுவதாகவும், இது அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் ஜனநாயக உரிமைகளை பாதிக்கும் எனவும் கூறியுள்ளது.

பழைய வேட்பு மனு அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டால் தங்களுக்கு அநீதி ஏற்படும் என்றும், இதன் மூலம் அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14(1) விதிகளில் உள்ள சமத்துவ உரிமை மற்றும் சட்டபூர்வ அரசியல் செயல்பாட்டில் ஈடுபடும் உரிமையை மீறுவதாகவும் இந்த குழு வலியுறுத்தியுள்ளது.

ஆகவே, இந்த மனு சம்பந்தமான இறுதித் தீர்ப்பு வரும் வரை ஏற்கனவே பெறப்பெற்ற வேட்புமனுக்களின் அடிப்படையில் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுவதை இடைநிறுத்தும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here