ஜனாதிபதியின் பட்ஜெட்டில் பெரும்பான்மையான மக்கள் மகிழ்ச்சி; சமன் ரத்னப்பிரிய

0
149

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டம் குறித்து நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து வரவு-செலவுத் திட்டத்தை தயாரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் கடந்த காலத்தில் ஜனாதிபதி மீது விமர்சனங்களை முன்வைத்திருந்தன.

இன்னும் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிவரும் ஜி.எல்.பீரிஸ் அன்றிலிருந்து இன்று வரை மக்களின் அபிவிருத்திக்கு என்ன சலுகைகளை வழங்கினார்?.

நாட்டின் அபிவிருத்தியையும் எதிர்காலத்தையும் முன்னிலைப்படுத்தியே ஜனாதிபதி வரவு – செலவுத்திட்டத்தை முன்வைத்துள்ளார். தேர்தலை இலக்குவைத்த வரவு -செலவுத் திட்டம் என்றால், அதில் மக்களுக்கு ஆசை வார்த்தைகளை காட்டியிருக்க முடியும். ஜனாதிபதி வெளிப்படையான ஒரு வரவு – செலவுத் திட்டத்தையே முன்வைத்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத்தை சில பகுதிகளில் மக்கள் கொண்டாடியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

ஓய்வூதியம் பெறுவோர், சிறுநீரக நோயாளர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், இளைஞர்கள், பெருந்தோட்ட மக்கள் மற்றும் ஏனைய மக்களின் வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான முன்மொழிவுகள் வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்மொழிவின் பிரகாரம் அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் மானியம் 2024ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இம்முறை வரவு – செலவுத் திட்டம் பற்றி எதுவும் கூற முடியாதுள்ளதால் கிரிக்கெட் பிரச்சினை தொடர்பில் கருத்துகளை வெளியிட்டுவந்தார். ஆனால், நாட்டை குழப்பும் அவரது அந்த முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலும், 2025ஆம் ஆண்டு பொதுத் தேர்தலும் நடத்தப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படும் என கூறியுள்ளார். ஆகவே, காரணமின்றி விமர்சிப்பவர்களுக்கு தகுந்த பதிலடியை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.” எனவும் அவர் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here