மாவீரர் தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின நினைவேந்தல் நேற்று (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை 6.05 அளவில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மாவீரர்கள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், ஈகைச்சுடரும் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முல்லைத்தீவு தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
முல்லைத்தீவு – முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு படையலிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், முல்லைத்தீவு – இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வல்வெட்டித்துறை கம்பர் மலையில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கரது நினைவாலயம் முன்பாக மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது, மாவீரர்களின் உறவுகள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு வவுனியா பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
மாணவர்களினால் நேற்று மாலை அஞ்சலி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை.
இருப்பினும், மாணவர்கள் உணர்வெழுச்சியுடன் பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்திலும் நினைவேந்தல் நிகவுகள் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, இரட்டை வாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது
பொதுச்சுடரினை இரண்டு மாவீரனின் தந்தை ஏற்றி வைக்க ஏனைய உறவுகளுக்கு அவர்களது உறவுகள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதேநேரம், முல்லைதீவு கடற்கரையில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்களினால் உயரிய இலட்சியத்திற்காக தங்களின் உயிரை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கடற்கரையில் மாலை 6.05 அளவில் மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட ஏனைய சுடர்கள் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிபரப்பப்பட்ட நிலையில், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
குறித்த அஞ்சலி நிகழ்வில் பெருந்திரளான பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டிருந்தார்கள்.
அத்துடன், யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.
மாவீரர்களின் பெற்றோர், சகோதரர்கள், உறவுகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதனிடையே, யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.