Sunday, January 19, 2025

Latest Posts

டயானா உட்பட மூன்று எம்.பிகள் பாராளுமன்ற அமர்வில் பங்குபற்ற ஒரு மாதத்துக்கு தடை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோரை ஒருமாத காலத்திற்கு பாராளுமன்ற செயல்பாடுகளில் இருந்து இடைநிறுத்துவதற்கான பிரேரணை இன்று (டிசம்பர் 02) காலை சபையில் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, குறித்த பிரேரணை இன்று காலை பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டதுடன், பிரேரணைக்கு ஆதரவாக 57 எம்.பி.க்கள் வாக்களித்ததுடன், எதிராக ஒருவர் வாக்களித்துள்ளார். 3 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஒக்டோபர் பிற்பகுதியில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய பெரேரா, ரோஹன பண்டார ஆகியோரின் பாராளுமன்ற சேவைகளை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்துவதற்கு நேற்றைய தினம் பரிந்துரைக்கப்பட்டது.

நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவினால் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின் போது, டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா சபைக்கு வெளியே தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்கான அழைப்பையும் விடுத்தார். இதன்போது சபையின் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சபையை தற்காலிகமாக ஒத்திவைத்தார்.

டயானா கமகே தனது சக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டாரவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தான் நேரில் பார்த்ததாகவும், அதில் தலையிட முற்பட்ட போது இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தம்மை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா, குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

தற்காப்புக்காகவே இவ்வாறு செயற்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் தம்மைப் பின்தொடர்ந்து வந்து, தகாத வார்த்தைகளால் திட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார குற்றம் சுமத்தியிருந்தார்.

பின்னர் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இது தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்தார்.

மேற்படி குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கை நவம்பர் 14 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது, அது மறுநாள் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு அனுப்பப்பட்டது.

நவம்பர் 28 அன்று, நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு அறிக்கையை ஆய்வு செய்வதற்காக பாராளுமன்ற வளாகத்தில் கூடியது.

இதன்போதே மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரு மாதத்திற்கு பாரளுமன்ற செயல்பாடுகளில் பங்கு பற்ற தடைவிக்க பரிந்துரைக்கப்பட்டது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.