எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தம்மீது தாக்குதல் நடத்தியதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் தமக்கு உரையாற்ற நேர ஒதுக்கீடுகள் எப்போது இடம்பெற்றுள்ளதென எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்துக்கு வினவச் சென்ற போதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சிறப்புரிமை கேள்வியை முன்வைத்து உரையாற்றிய அர்ச்சுனா எம்.பி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான நேர ஒதுக்கீடு தொடர்பில் கலந்துரையாட எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்துக்குச் சென்றேன். எனக்கான நேரம் தொடர்பில் அறிந்துக்கொள்ளவே சென்றேன். அத்தருணத்தில் சுஜித் பெரேரா எம்.பி என் மீது தாக்குதல் நடத்தினார்.
நாடாளுமன்றத்திலேயே எம்மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் பாதையில் நாம் எவ்வாறு செல்வது?. எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்த விவகாரம் தொடர்பிலேயே என்மீது அவர் தாக்குதல் நடத்தினார். எனக்கும் கையை உயர்த்த முடியும். நான் ஒரு வைத்தியர். ஆனால், நான் அதை செய்ய மாட்டேன்.” என்றார்.
இதன்போது குறிக்கிட்ட எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, ”யாழ்.மாவட்ட எம்.பி அர்ச்சுனா, எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்துக்கு வந்து எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளரிடம் மோசமான முறையில் செயல்பட்டார். முறையற்ற வார்த்தைகள் மற்றும் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தினார். அதனைதான் இவர் கூறுகிறார். இதுதொடர்பில் நாம் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளோம். சிலர் கல்விக் கற்றிருந்தாலும் அறிவித்தாவர்கள்.
இதுதொடர்பில் அவதானம் செலுத்தி பொருத்தமற்ற எம்.பிகளை எதிர்க்கட்சியில் அமரவிடாது வேறு இடத்தில் அமரச் செய்யுங்கள்” என்றார்.
இதன்போது குறிக்கிட்ட சுஜித் பெரேரா எம்.பி,
”நான் தாக்குதல் நடத்தியதாக அர்ச்சுனா எம்.பி என்மீது பாரிய குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். அவ்வாறு எந்தவொரு சம்பவமும் நடைபெறவில்லை. அவரது குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிக்கிறேன். அவர்தான் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார்.
மீண்டும் இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அர்ச்சுனா எம்.பி,
”இன்று பிற்பகல் 2.30 மணிக்கு எனக்கு எவ்வாறு நேரம் ஒதுக்கப்படும் என்று வினவ எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்குச் சென்றேன். நேரம் எவ்வாறு ஒதுக்கப்படுகிறது என்றே இதன்போது வினவினேன். சரியான தொடர்பாடலை அவர்கள் என்னிடம் பேணவில்லை.
நாளை நேரத்தை ஒதுக்குவதாக கூறினர். சுஜித் பெரேரா உள்ளிட்ட சிலர்தான் நேரத்தை ஒதுக்கீடு செய்வதாக கூறினர். அதை வினவ சென்றபோதுதான் அவர் என்மீது தாக்குதல் நடத்தினார். அவர்மீது தாக்குதல் நடத்த எனக்கும் ஒரு நெடி போதும். எனது தந்தையின் வயது இவருக்கு என்பதால் அதை நான் செய்யவில்லை.” என்றார்.
இவ்வாறு தொடர்ந்த வாக்குவாத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் சம்பவம் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு அளிக்குமாறு சபாபீடத்தில் இருந்த நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் ஹிமாளி வீரசேகர அர்ச்சுனா எம்.பியை அமைதிப்படுத்தினார்.