உயிருடன் இருக்கும் பெற்றோருக்கு மரணச் சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர்கள்!

Date:

– நடராசா லோகதயாளன்

முல்லைத்தீவில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு கிராம சேவகர்கள் பதவியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இருந்தபோதும் இவர்களுக்கு திணைக்கள ரீதியில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் நீடிக்கும் அசாதாரண சூழ்நிலைகள் (இனப் பிரச்சினை, பொருளாதார நெருக்கடி)  காரணமாக ஏதோ ஒரு வகையில் நாட்டை விட்டு பிரஜைகள் வெளியேற்றம் பெறுவது தொடர்கின்றது.

குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு  புலம் பெயர்கின்ற நிலைமைகள் தீவிரமடைந்துள்ளன.

இதன் காரணமாக வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்து செல்பவர்கள் தங்களை அந்த நாட்டின் பிரஜா உரிமையை பெறுவதற்காக பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது.

இதற்காக அவர்கள் உள்நாட்டில்ல இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய ஆவணங்களை அவசரமாக தகுதிகளை பூர்த்தி செய்யாமல் மிக விரைவாக பெற்றுக்கொள்வதற்கு அரச, தனியார் கட்டமைப்புக்களின்  அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கும் நிலைமைகள் காணப்படுகின்றது.

இந்தப் பின்னணியில் முல்லைத்தீவில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு புலம்பெயர்ந்த இரு இளைஞர்கள் தமக்கான நிரந்தர வதிவிட உரித்தைப் பெறுவதற்காக குறிப்பிட்ட நாட்டினால் கோரப்பட்ட நிபந்தனையை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது.

இதற்காக இவர்கள் தாங்கள் வசித்த கிராமத்தின் உத்தியோகத்தர்கள் ஊடாக ஆவணங்களை தயார் செய்ய முனைந்துள்ளனர். அதற்கு அமைவாக இரு கிராம சேவகர்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாவை வழங்கி உயிரோடு இருக்கும் தந்தையர் இறுதிப் போரின்போது மரணித்து விட்டதாக சான்றுப் பத்திரங்களை தயாரித்துள்ளனர்.

இத்துடன் புலம்பெயர் இளைஞர்களின் தேவை பூர்த்தியாகி அப் பணி நிறைவுற்றபோதும் அந்த இளைஞர்களின் உறவுகளிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறின் காரணமாக விடயம் அம்பலமாகியது.

இலங்கையில் மரணம் ஒன்று வைத்தியசாலையில் நிகழுமாயின் அது திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளின் பரிந்துரையின் பெயரில் மரணச் சான்றிதழைப் பெறவும் அதுவே காலம் கடந்த இறப்பு பதிவாகின் கிராம சேவகரின் சிபார்சின் அடிப்படையில் திடீர் மரண விசாரணை அதிகாரியின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் என்ற சட்ட ஏற்பாடு காணப்படுகின்றது.

இதற்கமையவே புலம்பெயர்ந்த இளைஞர்கள் காலம் கடந்த இறப்பு பதிவு என்ற வகையறைக்குள் கிராம சேவகர்கள் ஊடாக சான்றுப் பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த விடயம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு தெரியவந்தபோது உரிய இரு கிராம சேவகர்களும் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டதோடு திணைக்கள ரீதியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இவை தொடர்பில் கட்டுரையாளரால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  விண்ணப்பிக்கப்பட்ட வினாக்களுக்கு மாவட்டச் செயலகம் பதிலளித்தது.

அப் பதிலில் “திணைக்கள ரீதியில் இரு கிராம சேவகர்களுக்கும் தாபன விதிக் கோவை 2ஆம் தொகுதி  48ஆம் அத்தியாத்தின் பிரகாரம் பணி இடை நிறுத்தப்பட்டு தொடர்  நடவடிக்கை இடம்பெறுவதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை இல்லை!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 15 ஆம்...

சபாநாயகர் குறித்து பாராளுமன்றம் விளக்கம்

பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்தன அவர்களுக்கும், அவருடைய தனிப்பட்ட...

கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

நாட்டில் நிலவும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை இல்லாதொழிக்கும் வகையில் இந்தியாவிலிருந்து...

முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு நேற்று (07) துபாயில்...