Thursday, December 5, 2024

Latest Posts

அரசியல் கைதிகளைவிடுதலை செய்யுங்கள் – சபையில் தமிழரசின் எம்.பி. சாணக்கியன் வலியுறுத்து

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீது நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“நாட்டில் சமத்துவம் என்பது மிகவும் முக்கியமானது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனாலும், ஜனாதிபதி அண்மையில் ஆற்றிய அக்கிராசன உரையில் தமிழ் மக்களுக்கு மட்டும் உரித்தான சில பிரச்சினைகள் பற்றி பேசியிருக்கவில்லை.

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரதான கட்சி என்ற அங்கீகாரம் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மீண்டும் கிடைத்துள்ள நிலையில், இந்த விடயங்களை நான் கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன்.

அந்தவகையில் பல அரசியல் கைதிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஓர் அரசியல் நோக்கத்துக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய இந்தத் தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர்கள் மீது தற்போது பல்வேறு வழங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசும் தற்போது அந்தச் சட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இந்தநிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசு  கவனம் எடுக்க வேண்டும்.

அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு  நீதி கிடைக்க வேண்டும். இந்த விடயத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது மட்டுமின்றி, உண்மை கண்டறியப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

காணி சம்பந்தமான பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு அதிகம் இருக்கின்றன. இந்த விடயத்தில் சமத்துவம் என்ற அடிப்படையில் சிங்கள மக்களுக்கு இல்லாத பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு இருக்கின்றன.

மேய்ச்சல் தரையுடன் தொடர்புடைய மகாவலி அதிகார சபையுடைய பிரச்சினை வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ளன. இந்தப் பிரச்சினை தொடர்பில் அரசின் நிலைப்பாட்டை நாங்கள் அறிய வேண்டும்.

அதேபோல் தொல்பொருள் திணைக்களத்தால் இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை. ஆனால், தமிழ் மக்கள் தொடர்ச்சியாகத் தொல்பொருள் திணைக்களச் சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான  பிரச்சினையில் அரசு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இது நிர்வாக ரீதியான ஒரு பிரச்சினை. இது தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பிரச்சினை.

இந்நிலையில், அரசு இதற்கொரு தீர்வை வழங்க வேண்டும். ஏனெனில் ஆளும் கட்சிக்கும் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைத்துள்ளன. ஆகையினால், அரசு தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

மேலும், வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும். வடக்கில் உள்ள முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளன. அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

ஆனாலும், இந்த விடயத்தில் இன்னும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் பொது மக்களின் காணிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதனை அகற்ற அரசு முன்மாதிரியான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.