நாடளாவிய ரீதியில் 40 ஆசிரியர் வெற்றிடங்கள்

0
61

நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் சுமார் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக சட்டமா அதிபர் இன்று (04) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் நீதித்துறை செயற்பாடுகளை தவறாகப் பயன்படுத்தி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையினால் குறித்த வெற்றிடங்களை நிரப்புவதில் தடை ஏற்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அரச பாடசாலைகளின் கல்வித்தரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரச பாடசாலைகளில் கடமையாற்றும் வேளையில் பரீட்சை நடத்தி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண கல்வி அமைச்சு எடுத்த தீர்மானத்தை எதிர்த்து மாகாண கல்வி அமைச்சுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பாடசாலைகளில் கற்பிக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறான 06 மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இதனைத் தெரிவித்தார்.

இந்த மனுக்கள் இன்று முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுவான் போபகே, அரச பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிபுரியும் போது மனுதாரர்களை ஆசிரியர் சேவையில் இணைக்காமல் வெளியில் இருந்து பணியமர்த்துவதன் மூலம் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் பரீட்சை இன்றி ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்பட்டதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு, மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, மனுக்களை விசாரிப்பதற்கான நியாயமான காரணங்கள் இல்லாததால், அவற்றைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here