நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கிய 8,888 வேட்பாளர்களில் 2,042 வேட்பாளர்கள் நேற்று (03) பிற்பகல் 3.00 மணிக்குள் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை நாளை (06ம் திகதி) நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும், உரிய நேரத்திற்குள் அறிக்கைகளை சமர்ப்பிக்காமல் இருப்பது தவறு எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 8,361 வேட்பாளர்கள் போட்டியிட்டதுடன், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு 527 பேர் வேட்பாளராக முன்வந்து, 8,888 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.
அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,985 வேட்பாளர்களும், தேசியப் பட்டியலில் இருந்து 527 வேட்பாளர்களில் 57 பேரும் தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இத்தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளை சேர்ந்த 690 குழுக்கள் போட்டியிட்டதுடன், 106 குழுக்கள் அந்த குழுக்கள் தொடர்பான வருமான செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.