வேலணை பிரதேச சபையின் ‘பட்ஜட்’ நிறைவேற்றம்!

0
112

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 8 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வேலணை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டத்துக்கான விசேட கூட்டம் இன்று சபையின் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

பலத்த விவாதத்துக்குப் பின்னர் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தியால் ‘பட்ஜட்’ மீது வாக்கெடுப்பு கோரப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும் வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர்.

இந்தநிலையில் வரவு – செலவுத் திட்டத்துக்காக ஆதரவாக 9 உறுப்பினர்களும், எதிராக ஓர் உறுப்பினரும் வாக்களிக்க, ஓர் உறுப்பினர் நடுநிலை வகித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 6 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஓர் உறுப்பினர் என 9 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் உறுப்பினர் எதிர்த்து வாக்களித்ததுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஓர் உறுப்பினர் நடுநிலை வகித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினர் இன்றைய கூட்டத்துக்கு வருகை தரவில்லை.

இருபது உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 8 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக 6 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக 2 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் சார்பாக தலா ஓர் உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றனர்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here