எலிக்காய்ச்சல் தொற்றை நேரில் ஆராய வடக்குக்கு வந்தது வைத்திய நிபுணர் குழு

0
193

வடக்கு மாகாணத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கள நிலைமைகளை ஆராயும் நோக்கில் கொழும்பிலிருந்து சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவைச் சேர்ந்த வைத்திய நிபுணர் குழு ஒன்று யாழ்ப்பாணத்துக்கு நேற்று வியாழக்கிழமை விஜயம் செய்து ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

முதலில் நேற்று முற்பகல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவைச் சேர்ந்த வைத்தியர் நிபுணர் பிரபா அபயக்கோன் தலைமையிலான குழுவினர், காய்ச்சல் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளர்களைப் பார்வையிட்டதுடன் அங்கு ஆய்வு நடவடிக்கைளிலும்  ஈடுபட்டனர்.

அதேவேளை, அவர்கள், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி, பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா உள்ளிட்டவர்களுடன் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் பிற்பகல் வேளையில் அவர்கள், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து காய்ச்சல் காரணமாக அதிகளவான நோயாளர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நேற்றுப் பிற்பகல் விஜயம் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவைச் சேர்ந்த வைத்திய நிபுணர் குழுவினர், வைத்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிலைமைகளை ஆராய்ந்ததுடன், அங்குள்ள நோயாளர்களையும் பார்வையிட்டனர்.

மேற்படி குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை நோய்த் தொற்று ஏற்பட்ட இடங்களுக்கும் கள விஜயம் மேற்கொண்டு ஆராயவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here