சமஷ்டி அரசிலமைப்பு குறித்து தமிழ்க் கட்சிகளுக்கிடையில் இணக்கம்

Date:

சமஷ்டி அரசிலமைப்பு குறித்து தமிழ்க் கட்சிகளுக்கிடையில் இணக்கம்இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு தயாரிப்பில் ஒற்றையாட்சியை நிராகரித்து சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி முறைமைக்கு புதிய அரசாங்கத்தை வற்புறுத்துவது தொடர்பில் வடக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின்போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில், 2016ஆம் ஆண்டு தமிழ் வெகுஜன அமைப்புகளை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவை முன்வைத்த முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டு பேச்சுக்களை முன்னெடுப்பதே, இந்த பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நோக்கமாகும்.

இலங்கையின் ஒற்றையாட்சியையும் பௌத்த மதத்திற்கான முன்னுரிமையையும் பாதுகாக்கும் வகையில் மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை வரைபை இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்வதற்கான விருப்பத்தை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் 2016ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் முன்மொழிவுகளில் முதன்மையானது இலங்கை ஒரு சமஷ்டி குடியரசாக இருக்க வேண்டும் என்பதாகும்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று மன்னாரில்  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை சந்தித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்றத்தில் அரசியல் அமைப்பு வரைபு முன்வைக்கப்படும் போது நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் இருவரும் கலந்துரையாடியதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

“புதிய அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை கொண்டுவர உத்தேசித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் அந்த யாப்பு ஏக்கிய ராஜ்ய ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ள சூழ்நிலையில் அந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம் என்ற விடயம் தொடர்பிலும், தமிழ் தேசிய மக்களுடைய நிலைப்பாடு தொடர்பாகவும் ஒரு புதிய யாப்பு கொண்டுவரப்படுகின்ற சந்தர்ப்பத்தில் எங்களுடைய நிலைப்பாடு எவ்வகையானதாக இருக்க வேண்டும் என்ற விடயம் தொடர்பாகவும் நாங்கள் கலந்துரையாடினோம்.”

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இக்கலந்துரையாடலின் போது கவனத்திற்கு வந்த விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்த சிவஞானம் சிறீதரன், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கோரிய சமஷ்டி முறைமைக்கு எதிர்வரும் பொது வாக்கெடுப்பில் தமிழ் மக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து  கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.

“புதிய அரசியல் யாப்பு ஒன்று கொண்டுவரப்பட்டால் ஒற்றையாட்சி அடிப்படையிலான தீர்வு முயற்சிகளையே இந்த அரசாங்கம் முன்வைக்க முயலும். அவ்வாறான ஒற்றையாட்சி முறைமை முன்வைக்கப்பட்டு அது மக்கள் கருத்துக் கணிப்புக்கு வந்து வாக்கெடுப்பு நடத்தப்படும்போது ஒற்றையாட்சிக்காக தமிழ் மக்கள் வாக்களித்தால் அந்த வாக்கின் அடிப்படையில் சமஷ்டியை நிராகரித்து ஒற்றையாட்சியை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்ற செய்திதான் வெளியில் வரும். ஆகவே நாங்கள் சமஷ்டிக்காக போராடிக்கொண்டடிருக்கின்ற இந்த நேரத்தில் மக்கள் மதத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.”

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பேச்சுவார்த்தை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் மக்கள் பேரவை

2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் சுமார் 44 பக்கத் தீர்மானத் தொடரில், இந்த நாட்டில் தேசிய இனப் பிரச்சினைக்கு இலங்கை சிங்கள, பௌத்த நாடாக இருப்பதே பிரதான காரணமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்தேசிய இலங்கை அரசை ஸ்தாபிப்பதை முன்மொழிந்த அவர்கள், தமிழ் மக்களின் தனித்துவம் மற்றும் அவர்களின் சுயநிர்ணய உரிமை, முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

சர்வதேச தலையீடு

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முன்னர், அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை குறித்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடன் உடன்பாட்டு உடன்படிக்கை ஒன்று அமெரிக்கா அல்லது இந்தியா அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மூன்றாம் தரப்பு முன்னிலையில் கைச்சாத்திடப்பட வேண்டுமெனவும் தமிழ் மக்கள் பேரவை குறிப்பிடுகின்றது.  

இவ்வுடன்படிக்கையில் தமிழர்களின் தேசம் என்ற அங்கீகாரம், அவர்களின் சுயநிர்ணய உரிமை, இறைமை, கூட்டாட்சி அதிகாரம் பாரம்பரிய தாயகம், பொறுப்புக் கூறல் மற்றும் நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளின் விடுவிப்பு, காணாமல் போகச் செய்யப்பட்டோரின் பிரச்சினைகள், இராணுவமய நீக்கம், அரசால் செய்யப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்கள், பாதுகாப்பு துறை மறுசீரமைப்பு, குற்றங்கள் மீள நிகழாமை தொடர்பான உறுதியளிப்பு தொடர்பிலானவை போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தீர்மானங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.  

இலங்கை ஒரு சமஷ்டி குடியரசாக அரசாக இருக்க வேண்டும் எனவும், அது மத்திய, மாநில அரசு என இரு பகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் அது தெளிவாகக் கூறுகிறது.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளமைக்கு அமைய வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் எனவும், ஆளுநரை நியமிக்கும் போது நாட்டின் ஜனாதிபதி மாகாண முதலமைச்சரின் ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆளுநரின் பதவியானது அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் சம்பிரதாயபூர்வமானதாகவே இருக்குமெனவும் குறித்த முன்மொழிவுகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை

டிசெம்பர் 4ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு மற்றும் வடக்கு கிழக்கு மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தலைநகரில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

“ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு சமஷ்டி ஆட்சி அடிப்படையிலான அரசியல் தீர்வை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதை எங்கள் கட்சியின் நிலைப்பாடாக கூறினோம்.”

அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள நிலைப்பாட்டை புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் போது ஆராய முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டதாக சாணக்கியன் இராசமாணிக்கம் இதன்போது மேலும் தெரிவித்திருந்தார். 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஷிந்திர ராஜபக்சவிற்கு விளக்கமறியல்

அரகல பேராட்டத்தின் போது போலியான தகவல்களை வழங்கி நஷ்ட ஈடு பெற்றுக்கொண்ட...

சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது...

தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான...