பசிக்கு கட்சியோ, நிறமோ இல்லை என்பதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வலிமையான நாடு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்தும் வகையில் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டும் பல்துறை கூட்டுப் பொறிமுறையின் கீழ் பதுளை மாவட்டத்துக்கான வேலைத்திட்டத்தில் இன்று (15) இணைந்துகொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
பதுளை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் உரம் மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவிய நேரத்திலும், எந்த நாடும் எமக்கு கடன் வழங்க முன்வந்திராத நிலையிலுமே நாம் இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கினோம்.
2023 ஆம் ஆண்டு உணவுப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முகங்கொடுப்பதற்காகவே உணவுப் பாதுகாப்பு திட்டத்தை நாம் தொடங்கினோம். ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் இந்த வேலைத்திட்டத்தின் அமுலாக்கம் பற்றி மீண்டும் மீளாய்வு செய்யப்பட வேண்டுமென நான் பரிந்துரைக்கிறேன். அப்போது உங்களுக்கு புதிய தரவுகள் கிடைக்கலாம். அதன்படி, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை முறையான முறையில் மேற்கொள்வோம். இந்த திட்டம் 2023க்கு பின்னரும் முடிவடையாது. அதை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்.
பிரதேச சபைகளில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளனர். எனினும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
எவ்வாறாயினும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை நாம் வழங்கி வருகின்றோம். இம்முறை பெரும்போகம் வெற்றி பெற்றுள்ள அதேநேரம் எதிர்காலத்தில் எமக்கு மேலதிக அரிசி கையிருப்பும் கிடைக்கும்.
அங்கே போதிய களஞ்சிய வசதிகள் இல்லாமைக் குறித்தும் கண்டறிந்துள்ளோம். அப்பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதற்கிடையே நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்கவும் நாம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.
பதுளை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முடியும். அதற்குத் தேவையான வேலைத்திட்டத்தையும் நாம் தயாரித்து வருகிறோம்.
அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,
அதிக விளைச்சலை தரக்கூடிய பயிர்களை பயிரிடுவதற்கான வாய்ப்புகளை வழங்க நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கு நவீன விவசாய முறைகளை பயன்படுத்த தேவையான பணிகளையும் நாம் கையாள்கின்றோம். எங்களுக்கு உரம் கிடைக்காமல் இருந்தது. இப்போது தேவைக்கேற்ப உரம் கிடைக்கிறது.
மேலும் விவசாய நடவடிக்கைகளுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு ஹெக்டெயாருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அரசாங்கம் செலவழிக்கிறது என்றும் தெரிவித்தார்.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரீன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான சாமர சம்பத் தஸநாயக்க, தேனுக விதானகமகே, அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் வடிவேல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட, பதுளை மாவட்டச் செயலாளர் தமயந்தி பரணகம மற்றும் மாவட்ட அரச அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
N.S